மெல்போர்னில் நடைபெற்று வரும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அலஸ்டைர் குக் இரட்டை சதத்தால் இங்கிலாந்து 164 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் (26-ந்தேதி) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் வார்னர் சதத்தாலும், ஸ்மித் அரைசதத்தாலும் 3 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது.
ஆனால் நேற்றைய 2-வது நாளில் இங்கிலாந்தின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 327 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணியில் பிராட் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அனுபவ வீரர் அலஸ்டைக் குக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கேப்டன் ஜோ ரூட் அரைசதம் அடித்தார். இவர்கள் ஆட்டத்தால் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. அலஸ்டைர் குக் 104 ரன்னுடனும், ஜோ ரூட் 49 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் ஜோ ரூட் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 61 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த தாவித் மலன் (14), பேர்ஸ்டோவ் (22), மொயீன் அலி (26), கிறிஸ் வோக்ஸ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அலஸ்டைர் குக் நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி நிலைத்து நின்று விளையாடினார்.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் எடுத்திருந்தது. 9-வது விக்கெட்டுக்கு அலஸ்டைர் குக் உடன் பிராட் ஜோடி சேர்ந்தார். அப்போது குக் 182 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் குக் இரட்டை சதம் அடிப்பாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய ஸ்டூவர்ட் பிராட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் குக் இரட்டை சதத்தை நோக்கிச் சென்றார்.
128-வது ஓவரை ஜேக்சன் பேர்டு வீசினார். இந்த ஓவரின் நான்காவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி குக் இரட்டை சதம் அடித்தார். குக்கிற்கு இது ஐந்தாவது இரட்டை சதம் ஆகும். மறுமுனையில் விளையாடிய பிராட் 59 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
கடைசி விக்கெட்டுக்கு குக் உடன் ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தார். ஆண்டர்சனை ஒருபக்கம் வைத்துக் கொண்டு குக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இருவரும் இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை தாக்குப்பிடித்தனர்.
இதனால் இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 491 ரன்கள் குவித்துள்ளது. அலஸ்டைர் குக் 244 ரன்களுடனும், ஆண்டர்சன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
தற்போது வரை இங்கிலாந்து 164 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளை நான்காவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து விரைவாக அவுட்டானாலும், பாக்சிங் டே டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment