கான்பூர்:
நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு செல்லாது என அறிவித்து, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டது. பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் திரும்ப செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காலக்கெடுவும் விதித்தது.
அந்த காலக்கெடு முடிந்த பின்னர் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பது சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் கணக்கில் காட்டப்படாமல், கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
அவ்வகையில், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு வீட்டில் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது கட்டுக்கட்டாக கிட்டத்தட்ட ரூ.20 கோடி அளவுக்கு மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.
பணத்தை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட பணம் முழுமையாக எண்ணப்படவில்லை என்றும், எண்ணி முடிந்தபிறகே அதன் மதிப்பு தெரியவரும் என்றும் ரிசர்வ் வங்கி மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment