இஸ்ரேல் உடனான 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து: இந்தியா திடீர் நடவடிக்கை
புதுடெல்லி:
இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே ராணுவ உபகரணங்கள் வாங்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்த போது இருநாட்டு உறவுகளும் பலப்பட்டது. இதனால் இஸ்ரேலுடன் கூடுதலாக ராணுவ ஒப்பந்தங்கள் இந்தியா சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு முதல்முறையாக வருகிற ஜனவரி 14ல் 4 நாட்கள் பயணமாக இந்தியா வர உள்ளார்.
இஸ்ரேல் நாட்டுடன் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பெற இந்தியா சார்பில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் 1,600 பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை இஸ்ரேலின் முன்னணி ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனமான ரபேல் நிறுவனத்திடம் இருந்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது.
அந்த ஒப்பந்தத்தை தற்போது இந்தியா திடீரென ரத்து செய்துள்ளது. இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை ரபேல் ராணுவ தளவாட நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்காக ரபேல் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment