தேர்ந்தெடுக்கப்பட்ட 90 நபிமொழிகள் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 4 January 2018

தேர்ந்தெடுக்கப்பட்ட 90 நபிமொழிகள்

Related image

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
முன்னுரை

அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் ஏக நாயன் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். இறுதிமுடிவு இறையச்சம் உள்ளோருக்கே. சாந்தியும் சமாதானமும் நபிமார்கள் ரஸூல்மார்கள் அனைவருக்கும் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள் மற்றும் மறுமை வரை அவர்களைத் துயரும் அனைவர் மீதும் உண்டாவதாக.
இஸ்லாத்தில் ஸுன்னாவுக்கு மாபெரும் முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் குர்ஆனுக்குப் பிறகு இஸ்லாத்தின் பிரதான மூலாதாரம் இந்த ஸுன்னாதான். எனவே இதில் அதிக கரிசனை எடுப்பது முஸ்லிம்களுக்கு அவசியமாகும்.
அதனால் அல்லாஹ்வின் உதவியுடன் அடிப்படைக் கொள்கை, சட்டதிட்டங்கள், பண்பாடுகள் சம்பந்தப்பட்ட சில நபிமொழிகளைத் தெரிவு செய்ய முயற்சித்துள்ளதுடன், அவற்றில் ஒவ்வொரு நபிமொழியுடனும் சம்பந்தப்படும் மார்க்க சட்டதிட்டங்களையும் கூறுயிருக்கிறேன். ஈருலகிலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, முஸ்லிம்கள் நபியவர்களை நேசத்தடனும், கண்ணியத்துடனும் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே தொகுத்துள்ளேன்.
நபிமொழிகளுக்குப் படிப்பினைகள் கூறும்போது, இஸ்லாத்திற்கு சேவைசெய்த இமாம் நவவீ (ரஹ்), இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), போன்ற அறிஞர்களின் கூற்றுக்களிலிருந்து பயன்பெற முனைந்துள்ளேன். அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக.
இதற்கு முன்னரும் அல்லாஹ்வின் உதவியால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமொழிகள்” என்ற பெயரில் நான்கு பாகங்கள் எழுதியுள்ளேன். அல்லாஹ்வின் அருளால் அதற்கு வரவேற்புக் கிடைத்தது. அதேபோன்று இந்த ஐந்தாவது தொகுப்பும் ஏற்புடையதாக வேண்டுமென்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.
இந்நபிமொழிகளின் தரங்களைப் பொருத்தவரையில்: அந்நபிமொழி புஹாரி, முஸ்லிம் ஆகிய இரு நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டதாக இருந்தால் அதன் தரத்தைக் கூறத் தேவையில்லை. ஏனெனில் அவ்விரண்டிலும் இடம்பெற்றுள்ள நபிமொழிகள் ஆதாரபூர்வமானவை என்பது இச்சமூகத்தில் ஏற்கப்படும் அனைத்து அறிஞர்களின் கருத்தாகும்.
அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ, இப்னுமாஜஃ போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள நபிமொழியாக இருந்தால், ஹதீஸ்கலை மேதை அஷ்ஷேஹ் முஹம்மத் நாஸிருத்தீன் அல்அல்பானீ (ரஹ்) அந்நபிமொழிக்குக் கூறியுள்ள தரத்தை இங்கு நானும் கூறியுள்ளதுடன், திர்மிதீயில் இடம் பெற்றுள்ள நபிமொழிகளுக்கு இமாம் திர்மிதீயே வழங்கியுள்ள தீர்ப்பையும் இணைத்துள்ளேன். ஏனெனில் இத்துறையில் அவர்கள் தனித்து நிற்கக்கூடியவர். ஹதீஸுக்கு வழங்கும் தீர்ப்பானது, அத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களின் ஆய்வுக்கமையவே இடம்பெற்றுள்ளது. அவர்களின் ஆய்வுகள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம். அதனடிப்படையில் சில சந்தர்ப்பங்களில் தீர்ப்பும் மாறுபடலாம். நான் ஸுன்னா அல்லது நம்பகமான ஹதீஸ்கள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் அது ஹதீஸ்கலை அறிஞர்களிடத்தில் ஸஹீஹான அல்லது ஹஸன் என்ற தரத்திலுள்ள ஹதீஸ்களையே குறிக்கும். அல்லாஹ் அனைத்து அறிஞர்களுக்கும் அருள்புரிவானாக. இதில் ஏதாவது பயனுள்ள அறிவியல், சிந்தனை, இலக்கிய, இலக்கண கருத்துக்கள் இருந்தால் அவை நன்றியுணர்வுடன் கருத்தில் கொள்ளப்படும்.
பின்னர் அழைப்புப்பணிக்கு சகல விதத்திலும் பயன்படும் சிறந்த வழிகாட்டல்களை எமக்குத் தந்துதவும் ரியாத் மாநகரத்திலுள்ள ரப்வா இஸ்லாமிய அழைப்பு நிலையத்தின் நிர்வாகத் தலைவர் அஷ்ஷேஹ் காலித் இப்னு அலீ அபல்கைல், நிலையத்தின் சனசமூகப்பிரிவுப் பொறுப்பாளர் அஷ்ஷேஹ் நாஸிர் இப்னு முஹம்மத் அல்ஹுவைஷ் ஆகியோருக்கும், ஏனைய பொறுப்புதாரிகளுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
அதேபோன்று எனக்கு பயனளிக்கும் பல நல்ல கருத்துகள், ஆலேசனைகள் வழங்கிய இந்நிலையத்தில் பணிபுரியும் எனது சகோதர அழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, அழைப்புப் பிரிவின் செயலாளர் சகோதரர் அப்துல்அஸீஸ் மழ்ஊப் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லாஹ் அனைவருக்கும் ஈருலக நலவுகளையும் வழங்குவானாக. நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் கிளையார்கள், தோழர்கள், மறுமை வரை அவர்களின் வழியில் சென்ற அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages