குழந்தைகள் கதை கேட்பது திறமையை வளர்க்கும் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 13 January 2018

குழந்தைகள் கதை கேட்பது திறமையை வளர்க்கும்

கதை கேட்கும் குழந்தைகளின் கற்பனை சக்தி பெருகுகிறது. கவனிக்கும் திறன் வளர்கிறது. கதைகள் பெற்றோரையும் குழந்தைகளையும் இன்னமும் நெருக்கமாக்குகின்றன. எப்போதும் ஓடித் துள்ளித் திரிந்து கொண்டிருக்கும் குழந்தைகள், ஒரு இடத்தில் அமர்ந்து கதை கேட்கையில், கவனிப்பதற்கும், அமைதியாக மனதை கதையில் ஈடுபடுத்தவும் பழகுகின்றனர்.

அன்பு, கருணை, ஒத்திசைவு, அழகு, அமைதி போன்றவற்றை அறிய உதவும் கருவிகளாக, கதைகள் விளங்குகின்றன. கதை கேட்பது, கற்றலுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை அமைக்கிறது. புத்தகத்தில் பார்க்கும் படங்களையும், நாம் சொல்லும் கதையையும் தொடர்புப்படுத்த, குழந்தைகள் கற்கின்றனர். இந்த கதை கேட்கும் திறன், குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதோடு, அவர்களை மகிழ்விக்கவும், ஏமாற்றம், கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைக்கவும் உதவுகிறது. கதைகள் கேட்பது, கதைகளில் இன்னமும் ஆர்வத்தை அதிகப்படுத்தி, பின்பு புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கும் அடிப்படைத் தளம் அமைக்கிறது.

* கதைகள் சொல்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். இரவு படுக்கைக்கு முன் என்பது சரியாக இருக்கலாம். தினமும் அந்த நேரத்தில் கதை சொல்வதென்பது ஒரு பழக்கத்தையும் ஒழுங்கையும் கொண்டு வரும். நாளெல்லாம் ஓடி விளையாடிக் களைத்த குழந்தைக்கு அது ஒரு நல்ல புத்துணர்வூட்டும் நிகழ்வாக இருக்கும். கதையில் ஒருமுகப் பட்டு அமைதியான குழந்தையை, ஒன்றிரண்டு தாலாட்டுப் பாடல்களால் உறங்க வைப்பதும் சுலபம்.

* ஒரு பெரிய திருப்பத்திற்கு முன் கொஞ்சம் நிறுத்தவும் (pause).இது, குழந்தைகளின் எதிர்பார்ப்பைத் தூண்டி, கதையின் மேலிருக்கும் ஆவலை அதிகரிக்கும்.

* கதைகளில் வரும் உணர்ச்சிகளான கோபம், பயம், அமைதி, மகிழ்ச்சி, ஏமாற்றம் போன்றவைகளை உங்கள் முகத்தில் காண்பிக்கவும். உங்கள் குரலும், முக பாவனைகளுமே, குழந்தைகளை, கதை உலகத்திற்கு அழைத்துச் சென்று கதையை உயிர்ப்பிக்கின்றன.* கதாபாத்திரங்களின் உடையை, முகமூடியை அணியுங்கள். கரடிக் கதை சொல்கையில், கரடியின் முகமூடி இருந்தால் அதை அணிந்து கொண்டு சொல்லுங்கள்.

* கதையில் வரும் செயல்களை, முடிந்தவரையில் நடித்துக் காட்டுங்கள். காக்கா, வடையை எடுக்கப் பறந்து வந்தது என்று என் கைகளை சிறகுகளாகப் பறக்க வைக்கையில், என் குழந்தையின் கைகளும் சிறகைப் போல ஆடுவதைப் பார்த்திருக்கிறேன். குரங்கு குல்லாவை எடுத்த கதையில் குல்லாவை நான் போட்டுக் கொண்டு சொன்னால், பக்கத்திலிருந்த பிளாஸ்டின் பாத்திரத்தை குல்லா போல அவனும் போட்டுக் கொள்வான்.

* உண்மைக்கும், புனைவு கதைகளுக்கும் அதிகம் வித்தியாசம் தெரியாத சிறு குழந்தைகளிடம் பெரும்பாலும் உண்மையான கதைகளையே, அல்லது உண்மைக்கு ஒட்டி வருகின்ற நிகழ்வுகளையே சொல்வது நல்லது. குழந்தைகளின் மனோ மாதிரி (mental model)உண்மையை அடித்தளமாகக் கொண்டு வளர்வதே சிறந்தது. குழந்தையின் மனது ஒரு பெரிய உறிஞ்சும் ஸ்பாஞ்ச் போல. நாம் சொல்லும் அனைத்து விஷயங்களையும் எந்த வடிகட்டியும் இல்லாது உண்மையென்று நம்பி விடும். எனவே, கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை.

* கூறிய கதைகளையே மீண்டும் கூறலாம். தவறில்லை; மேலும், “எந்தக் கதை சொல்ல?” என்று குழந்தைகளையே கூட கேட்கலாம்.

* கதையைக் கூறி முடித்த பின், ”இதனால் அறியப்படும் நீதி யாதெனில” என்றெல்லாம் சொல்லாமல், கதையின் படிப்பினையை அவர்களாகவே புரிந்து கொள்வதற்கு விட்டு விடவும்.

கதைகளைக் கேட்பது குழந்தைகளின் உரிமை. அதற்குத் தகுந்த நேரம் ஒதுக்கி, அவர்களுக்குக் கதைகள் சொல்வது, பெற்றோர்களாகிய நம் கடமை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages