மனிதர்களின் நினைவாற்றல் குறித்து சர்வதேச அளவில் நடந்த ஆய்வுகளில், ஆண்களைவிட பெண்களே அதிக நினைவாற்றல் கொண்டவர்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது.
மனிதர்களின் நினைவாற்றல் குறித்து சர்வதேச அளவில் நடந்த ஆய்வுகளில், ஆண்களைவிட பெண்களே அதிக நினைவாற்றல் கொண்டவர்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது. ‘ஆண்கள் எல்லா விஷயத்தையும் எளிதில் மறந்து விடுவார்கள். சம்பவங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரமாட்டார்கள்’ என்கிறது ஆய்வு.
சிறு வயது முதல், தங்கள் வாழ்க்கையில் நடந்த உணர்வுபூர்வமான விஷயங்கள் அனைத்தையும் பெண்கள் நினைவில் வைத்திருப்பார்கள். அதற்கு காரணம், பெண்களின் மூளை அமைப்பு. பெண்களின் மூளையில் குறிப்பிட்ட பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். அதனால் அந்த பகுதி எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும். அங்கு பதிவாகும் விஷயங்கள் விரைவாக மறக்காது. பெண்கள் உணர்வுபூர்வமான விஷயங்களை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வார்கள். அல்லது திரும்பத் திரும்ப யாரிடமாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்களது நினைவாற்றலுக்கு அதுவும் ஒரு காரணம்.
அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் மோரியன் லிகேடீ, பெண்களின் நினைவாற்றல் பற்றி ஆய்வு செய்து ஒரு புத்தகம் எழுதினார். அதன் பெயர்: வொய் மேன் நெவர் ரிமெம்பர் அண்ட் வுமென் நெவர் பர்கெட். அதாவது ‘ஏன் ஆண்கள் நினைப்பதில்லை, பெண்கள் மறப்பதில்லை’ என்பதை விஞ்ஞானபூர்வமாக விளக்கியுள்ளார். ஆண்களின் மூளை அமைப்பே அவர்கள் சம்பவங்களை மறக்கும் விதத்தில்தான் அமைந்திருக்கிறது என்றும், மூளையின் மாறுபட்ட செயல்பாடுகளும் அதற்கு காரணம் என்றும் சொல்கிறார். சிகிச்சை அதற்கு பலனளிக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
மொழிகளை கற்றுக்கொள்வதிலும் பெண்கள்தான் வேகமாக செயல்படுகிறார்கள். மொழியின் இலக்கணத்தைப் புரிந்துகொள்வதிலும், சொற்கட்டமைப்பை உணர்ந்து கையாள்வதிலும், எழுதுவதிலும், பேசுவதிலும், பிழைகளை திருத்திக் கொள்வதிலும் பெண்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். அதனால்தான் பள்ளித் தேர்வுகளில் பெண்களின் வெற்றி சதவீதம் அதிகமாக இருக்கிறது. பெண்களின் மூளைப் பகுதியில் மொழியை கையாண்டு நிர்வகிக்கும், ‘நெர்வ் ட்ரான்ஸ்மீட்டர் டோபேமைன்’ எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக இருக்கிறது. அதனால் கற்பது, நினைவில்வைத்திருப்பது, பிரயோகப்படுத்துவது போன்றவைகளில் பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள். இது பெரும்பாலான பெண்களுக்கு பொருந்தும்.
அதே நேரத்தில் விழிப்புணர்வு மற்றும் சமயோசித செயல்பாடுகளில் பெண்களைவிட ஆண்கள் மேம்பட்ட நிலையில் இருப்பதாக ஆய்வு சொல்கிறது. தங்களை சுற்றி ஏற்படும் சலனங்கள், மாற்றங்களை ஆண்களே சிறப்பாக உணர்ந்துகொள்கிறார்கள். தாம் சந்திப்பவர்களில் யார் நல்லவர்? யார் கெட்டவர் என்பதை கணிப்பதிலும் ஆண்கள் உயர்ந்த நிலையிலே இருக்கிறார்களாம். இந்த ஆற்றல் பெண்களிடமும் குறிப்பிடும்படி இருந்தாலும், அதை மேம்படுத்தாமல் எளிதாக உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, மற்றவர்களை நம்பிவிடுவார்கள் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள். பெண்கள் நம்பி ஏமாந்துவிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களது முகத்தைப் பார்த்து ஆண்களால் கண்டறிந்துவிட முடியாது. அவர்கள் அகத்தில் இருப்பதை முகத்தில் காட்டமாட்டார்கள். தங்கள் எண்ணங்களை முகத்தில் வெளிப்படுத்தாமல் மறைக்கும் திறன் அவர்களுக்கு ஆண்களைவிட அதிகம் இருக்கிறது. பெண்கள் மனதில் இருப்பதை அப்படியே வெளியே கொட்டிவிடவும் மாட்டார்கள். எல்லா நேரமும் அவர்களிடமிருந்து எல்லா விஷயங்களையும் கறந்துவிட முடியாது. அவர்களாக விருப்பப்பட்டு சொன்னால்தான் உண்டு. யாரிடம் என்ன பேசவேண்டும் என்று கணக்குவைத்தும் அவர்கள் பேசுவார்கள். பெரும்பாலான பெண்களிடம் இந்த குணம் உண்டு. ஆனால் ஆண்கள் இதற்கு நேர்மாறான குணங்களை கொண்டிருப்பார்கள். எல்லோரிடமும் எல்லாவற்றையும் மனந்திறந்து கொட்டிக்கொண்டே இருப்பார்கள்.
எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து கேட்கும் திறன் பெண்களுக்கு அதிகம். ஆண்களுக்கு அது கொஞ்சம் குறைவு. காரணம் பெண்கள் ஒன்றை கேட்கும்போது மூளையின் இரு பக்கத்தையும் பயன்படுத்துவார்கள். ஆண்கள் ஒரு பக்கத்தை மட்டுமே பயன்படுத்துவார்கள். ஒருவர் பேசும்போது பெண்கள் முழு கவனத்தையும் அவரை நோக்கித் திருப்பிவிடுவார்கள்.
பெண்களின் அபார ஞாபக சக்திக்கு பல காரணங்கள் இருப்பதாக டாக்டர் மோரியன் லிகேடீ குறிப்பிட்டிருக்கிறார். ‘பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் உள்வாங்கும்போதே, அதை நாலு பேரிடம் சொல்லவேண்டும் என்ற ஆசை அவர்களிடம் வந்து விடும். அதனால் விலாவாரியாக அதை கேட்டு மூளையில் பதித்துக்கொள்வார்கள். தான் கேட்ட விஷயத்தை மற்றவர்களிடம் சொல்லவேண்டும் என்று அவர்கள் மனது துடியாய் துடிக்கும். சொல்ல முடியாவிட்டாலும், அத்தகைய எண்ணம் வரும்போதெல்லாம், அந்த சம்பவங்கள் அவர்கள் மனதில் நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கும்' என்கிறார்.
No comments:
Post a Comment