புகாரி நபிமொழித் தொகுப்பிலிருந்து சில..
|
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீத் அல்குத்ரீ அறிவிக்கிறார்கள், என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழாகளான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது.
அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்,
நபி(ஸல்) அவர்கள் "தாத்துஸ் ஸலாஸில்"எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, "மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?" என்று கேட்டேன். அவர்கள், "ஆயிஷா" என்று பதிலளித்தார்கள். நான், "ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)" என்று பதிலளித்தார்கள். "பிறகு யார் (பிரியமானவர்)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பிறகு உமர் இப்னு கத்தாப் தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)" என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள், நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவிற்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூ குஹாஃபாவின் மகன் (அபூ பக்ர் அவர்கள்) அதை எடுத்துக் கொண்டு அதிலிருந்து ஒரு வாளி நீரை.... அல்லது இரண்டு வாளிகள் நீரை... இறைத்தார். அவர் (சிறிது நேரம்) இறைத்தபோது சோர்வு தெரிந்தது. அல்லாஹ் அவரின் சோர்வை மன்னிப்பானாக! பிறகு, அது மிகப் பெரிய வாளியாக மாறிவிட்டது. அப்போது அதை கத்தாபின் மகன் உமர் எடுத்தார். உமர் இறைத்ததைப் போன்று இறைக்கிற (வலிமை மிக்க) ஒரு புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை மக்களில் நான் பார்த்ததில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர் நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைக்கும் அளவிற்கு (அவர் நீர் இறைத்தார்.)
அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்,
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோரும் உஹது மலை மீது ஏறினார்கள். அது அவர்களுடன் நடுங்கியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், "உஹதே! அசையாமல் இரு! ஏனெனில், உன் மீது ஓர் இறைத்தூதரும், (நானும்) ஒரு சித்தீக்கும், இரண்டு உயிர்த் தியாகிகளும் உள்ளனர்" என்று கூறினார்கள்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள்,
நபி(ஸல்) அவர்கள், "நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடி யோசையைச் செவியுற்றேன். உடனே, "யார் அது?" என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), "இவர் பிலால்" என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், "இது யாருக்குரியது?" என்று கேட்டேன். அவர், (வானவர்), "இது உமருடையது" என்று கூறினார். எனவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (எனவே, அதில் நுழையாமல் திரும்பிவிட்டேன்)" என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), "இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்" என்று கேட்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்கள்,
"நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில் என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அந்தப்) பாலை நான் (தாகம் தீரும் அளவு) அருந்தினேன். இறுதியில், என் நகக்கண்... அல்லது, நகக் கண்கள் ... ஊடே (பால்) பொங்கி வருவதைக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த மிச்சத்தை) உமர் அவர்களுக்குக் கொடுத்தேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், "இதற்கு (இந்தப் பாலுக்கு) நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், இறைத்தூதர் அவர்களே!" என்று கேட்க, அதற்கு அவர்கள், "அறிவு" என்று பதிலளித்தார்கள்.
உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கிறார்கள்,
நபி(ஸல்) அவர்கள் (சிறார்களாயிருந்த) என்னையும் ஹஸன்(ரலி) அவர்களையும் கையிலெடுத்து "இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கிறேன், நீயும் நேசிப்பாயாக!" என்று பிரார்த்திப்பார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி), மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள்,
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அதன்) நம்பிக்கைக்குரிய ஒருவர் உண்டு. சமுதாயமே! நம்முடைய நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்கள் தாம்.
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ நுஅம்(ரஹ்) அறிவிக்கிறார்கள், அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களிடம் (இராக்வாசி) ஒருவர் இஹ்ராம் அணிந்தவரைக் குறித்து வினவினார். அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்), "இஹ்ராம் அணிந்தவர் ஈயைக் கொல்வது (அனுமதிக்கப்பட்டதா இல்லையா என்பது) குறித்து கேட்டார் என்று எண்ணுகிறேன்" என்று கூறுகிறார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), "இராக்வாசிகள் ஈயைக் (கொல்ல அனுமதியுண்டா இல்லையா என்பது) குறித்து கேட்கிறார்கள். அவர்களோ ஏற்கனவே அல்லாஹ்வின் தூதருடைய மகளின் மகனை (ஹுஸைனைக்) கொன்றுவிட்டார்கள். (ஆனால்,) நபி(ஸல்) அவர்கள், "அவர்கள் இருவரும் (ஹஸன் - ரலி - அவர்களும் ஹுசைன் -ரலி - அவர்களும்) உலகின் இரண்டு துளசி மலர்கள் ஆவர்" என்று (அவர்களைக் குறித்து) கூறினார்கள்" எனக் கூறினார்கள்.
No comments:
Post a Comment