அலிபாபா நிறுவனத்துடன் இணைந்து வேலையற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ஆந்திரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு:
உலகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில், சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனமும் ஆன்லைன் வரத்தகத்தில் கொடிகட்டி பறக்கிறது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் மதிப்பில் ஆன்லைனில் விற்பனை செய்து சாதனை புரிந்து வருகிறது.
இந்தக் குழுமம் 1999-ல் ஜாக் மாவால் நிறுவப்பட்டது. முதலில் அலிபாபா.காம் என்ற வலைத்தளத்தை சீனத் தயாரிப்பாளர்களை வெளிநாட்டு வணிகர்களுடன் இணைக்க வழிசெய்வதற்காக ஜாக் மா உருவாக்கினார். அலிபாபா இந்தியாவில் காலடி பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக செப்டம்பர் 2014-ல் ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க அலிபாபா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக ஆந்திரப்பிரதேச அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இதற்காக ஆந்திரப்பிரதேச மாநில தகவல் தொலைதொடர்புத்துறை மந்திரி நரா லோகேஷ் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி பூமா அகிலா ப்ரியா ஆகியோருடன் அலிபாபா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பான ஒப்பந்தம் இன்னும் பத்து நாட்களில் கையெழுத்தாகும் என ஆந்திரப்பிரதேச மாநில சுற்றுலாத்துறை மந்திரி பூமா அகிலா ப்ரியா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என அலிபாபா நிறுவனத்தின் இந்திய தலைவர் வொண்டர் சங் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் அலிபாபா நிறுவனம் 3 நிமிடத்தில் 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை விற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment