இஸ்லாம் குறித்த விவாதங்கள்! - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, 13 January 2018

இஸ்லாம் குறித்த விவாதங்கள்!

தொடர்புடைய படம்
இஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. ‘இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா?’ என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. நான் மார்க்க அறிஞனல்ல என்றாலும், நானறிந்த வரையில் ஒரு சிறு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன். யாரையும் பழிப்பதோ, குத்திக்காட்டுவதோ என் நோக்கமல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
விமரிசனம் என்பது இஸ்லாத்திற்கு புதியது அல்ல. நபிகளாரின் காலத்திலிருந்தே அது கடுமையான கண்டனங்களையும் விமரிசனங்களையும் சந்தித்தே வந்திருகிறது. அவற்றிற்கான தக்க பதில்களும் விளக்கங்களும் அவ்வப்போது அளிக்கப்பட்டும் வந்துள்ளன. ஒருவகையில் இஸ்லாம் இத்தகைய விமரிசனங்களை வரவேற்கிறது என்று கூட சொல்லலாம். எனவே, இஸ்லாத்தை குறித்து யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்யலாம். விவாதம் ஆரோக்கியமானதாக நடைபெற கீழ்க்கண்ட சில அடிப்படைகளை புரிந்து மனதில் இறுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

“கோப்பையை காலி செய்”
ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் சிறந்த ஸென் துறவியை சந்திந்து அவரிடம் ஞானம் பற்றி தெளிவு பெறுவதற்காக சென்றார். துறவி அமைதியாக தேனீரினை கோப்பையில் ஊற்றிக் கொண்டு இருந்த போது, பேராசிரியர் ஸென் புத்த மதத்தை பற்றியும் தியானம் பற்றியும் தனக்கு தெரிந்ததை பற்றி வலவல வென்று பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியரின் கோப்பையின் விளிம்பு வரை தேனீர் ஊற்றிக் கொண்டு இருந்த துறவி, நிறுத்தாமல் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பையில் இருந்து வழியும் தேனீரை கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர், ஒரு நிலைக்கு மேல் பொறுக்காமல் “கோப்பை நிறம்பி விட்டது. இதற்கு மேல் அதில் இடம் இல்லை” என்றார். அதற்கு துறவி “நீயும் இந்த கோப்பை போல் தான்”, “நீ எப்போழுது உனது கோப்பையை காலி செய்து இடம் வைக்கிறாயோ, அப்போது தான் உனக்கு ஞானம் பற்றி என்னால் கூற முடியும்” என்றார்.

ஆக, இஸ்லாம் பற்றி நன்கு விளங்கிக்கொள்ள விரும்பும் நண்பர்கள் முதலில் தங்கள் கோப்பைகளை காலி செய்து கொள்வது நல்லது. விவாதத்தின்போது வெளிப்படும் புதிய கருத்துக்கள், புதிய கோணங்கள், புதிய விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மனதில் இடம் வேண்டுமல்லவா?

2. விவாதத்தின் கருப்பொருள்:

இஸ்லாத்தின் கருத்துக்களோடு முஸ்லிம்களின் சொல், செயல் ஆகியவற்றை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நடைமுறையில் முஸ்லிம்களின் சொல், செயல் அனைத்தும் எல்லா நேரங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படைகளை சார்ந்து இருப்பதில்லை. இது ஒரு கசப்பான உண்மை. பின்லாடனாக இருந்தாலும், கொமைனியாக இருந்தாலும், நாகூர் ரூமியாக இருந்தாலும், நானாக இருந்தாலும் இந்த நிலைதான். இறைத்தூதர்கள் மட்டுமே இதில் விதிவிலக்கானவர்கள். நபிகளாரின் சொல் செயல் அனைத்துமே இஸ்லாமாக இருந்தது.
ஆக, விவாதிக்கப்படும் பொருள் இஸ்லாத்தின் கருத்தா அல்லது முஸ்லிம்களின் சொல், செயல்பாடுகளா என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.

3. ஆதாரம் ப்ளீஸ்..

இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும்தான். எனவே உங்கள் சந்தேகங்களை முடிந்தவரை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள். குர்ஆன் வசனங்களை யாராவது உங்களுக்கு தவறாக விளக்கி இருக்கலாம். ஹதீஸ் என நீங்கள் நம்பி இருந்த ஒரு செய்தி வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம். அதனால், ‘நான் ஆதாரம் காட்டினால் நீங்கள் இஸ்லாத்தை விட்டு விலக தயாரா?’ என்பது போன்ற சவால்களை தவிர்க்கவும்.
‘முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்’ என்பது போன்ற பொதுப்படையான வாக்கியங்களையும் (generalised statements) தவிர்க்கவும். இத்தகைய விவாதங்களுக்கு முடிவென்பதே கிடையாது.
4. விளக்கம் கிடைக்க தாமதமாகலாம்:
பொதுவாக இஸ்லாத்தை வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும் கேள்விகளும் சந்தேகங்களும் முஸ்லிம்களுக்கு தோன்றுவதில்லை. அவற்றிற்கான விளக்கங்களும் அவர்களிடம் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அத்தகைய கேள்விகளை எதிர் நோக்கும் முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்படாமல் மார்க்க நூற்களையும் மார்க்க அறிஞர்களையும் அணுகி தக்க விளக்கம் பெற்று பதிலளிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதனால், நீங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தக்க விளக்கம் கிடைக்க தாமதமாகலாம். ஆனால் இஸ்லாத்தில் அத்தகைய கேள்விகளுக்கு பதிலில்லை என்ற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.
5. முகமூடிகள் ஜாக்கிரதை:
இணையத்தில் நிறைய முகமூடிகள் உலவுகின்றனர். இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புபவர்களும் அவர்களுள் இருக்கலாம். அதனால் பெயரை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட வேண்டாம். அத்தகையோர் வெளிப்படுத்தும் கருத்துக்களை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages