பல்வேறு அரசியல் சர்ச்சைகள், கட்சிகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் இன்றைய தினம் விசேட பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறுகின்றது.
இந்த விசேட அமர்வில் கலந்துகொள்ளுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பில் விவாதம் நடத்துவது குறித்து தீர்மானிக்கும் நோக்கிலேயே இன்று பாராளுமன்றம் கூடுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் கடந்த மூன்றாம் திகதி தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டதைதொடர்ந்து நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் பாராளுமன்றம் உடனடியாக கூட்டப்படவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்ததுடன் அதுதொடர்பில் சபாநாயகரிடம் கோரிக்கையும் விடுத்திருந்தார். அந்தவகையிலேயே பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் 14 ஆம் இலக்க ஏற்பாடுகளின் கீழ் பாராளுமன்றம் இன்றயை தினம் கூடுகிறது.
இன்றைய தினம் சபையில் மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பான பரபரப்பான விவாதத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராயப்படும். குறிப்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலும் அது தொடர்பான ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்றைய தினம் உரையாற்றவுள்ளனர்.
இதன்போது எதிர்க்கட்சி, மற்றும் ஆளும் கட்சிக்கிடையே கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக அரசியல் கட்சிகள் தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவுள்ளன.
குறிப்பாக இன்றைய தினம் சபை அமர்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முக்கிய உரையொன்றை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் நிதி அமைச்சர் , முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர், மற்றும் பேப்பச்சுவல் ட்ரரிஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென பரிந்துரை செய்துள்ளதாக ஜனாதிபதி கடந்த மூன்றாம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment