குளிர்கால ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 12.5 கிலோ மீட்டர் தூர பனிச்சறுக்கு போட்டியில் பிரான்ஸ் வீரர் மார்ட்டின் போர்கடே தங்கப்பதக்கம் வென்றார்.
பியாங்சாங்:
23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 12.5 கிலோ மீட்டர் தூர பனிச்சறுக்கு போட்டியில் பிரான்ஸ் வீரர் மார்ட்டின் போர்கடே தங்கப்பதக்கம் வென்றார். சுவீடன் வீரர் செபாஸ்டியன் சாமுவேல்சன் வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனி வீரர் பெனடிக்ட் டோல் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
மார்ட்டின் 2014-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் இதே பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் தூர போட்டியில் ஜெர்மனி வீராங்கனை லாரா டாலெமியர் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். சுலோவாக்கியா வீராங்கனை அனஸ்டாசியா குஸ்மினா வெள்ளிப்பதக்கமும், பிரான்ஸ் வீராங்கனை அனைஸ் பெஸ்கான்ட் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
பெண்களுக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங் 1500 மீட்டர் தூர பந்தயத்தில் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் பனியில் வேகமாக சென்று அசத்திய நெதர்லாந்து வீராங்கனை இரீன் வுஸ்ட் தங்கப்பதக்கத்தையும், ஜப்பான் வீராங்கனை மிஹோ தகாஜி வெள்ளிப்பதக்கமும், நெதர்லாந்து வீராங்கனை மாரிட் லீன்ஸ்ட்ரா வெண்கலப்பதக்கமும் வென்றார்கள்.
பெண்களுக்கான ஸ்னோபோர்டு போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெமி ஆண்டர்சன் தங்கப்பதக்கமும், கனடா வீராங்கனை லாவ்ரி புளோன் வெள்ளிப்பதக்கமும், பின்லாந்து வீராங்கனை இமி ருகாஜவி வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார்கள்.
பிகர் ஸ்கேட்டிங் பெண்கள் அணிகள் பிரிவில் கனடா தங்கப்பதக்கமும், ரஷியா வெள்ளிப்பதக்கமும், அமெரிக்கா வெண்கலப்பதக்கமும் வென்றன.
பதக்கபட்டியலில் ஜெர்மனி முதலிடத்திலும், நெதர்லாந்து 2-வது இடத்திலும் உள்ளன.
No comments:
Post a Comment