வேறுபாடுகளை வீசி எறியுங்கள்.அரசியல் கண்ணாடியை அகற்றி அப்பால் வீசுங்கள்.அணிந்திருக்கும் பிரதேசவாத சட்டையை பிய்த்து எறியுங்கள்.சுயநலம் என்ற குகையை விட்டு வெளியே வாருங்கள்.
இன்று இரவு எனக்கு மட்டும் ரொட்டி கிடைத்தால் போதும்,நான் நிம்மதியாகத் தூங்கினால் மட்டும் போதும் என்ற எண்ணத்தை இல்லாமல் செய்யுங்கள்.
அடிப்பவன் கடையின் சொந்தக்காரன் தௌஹீத்வாதியா ஹுப்பா என்று பார்த்து அடிப்பதில்லை.
எரிப்பவன் நீங்கள் மட்டக்களப்பானா கொழும்பானா என்று வேறுபாடு பார்த்து எரிப்பதில்லை.
கொழுத்துபவன் நீங்கள் மக்கள் காங்கிறசா முஸ்லிம்காங்கிறசா என்று பார்த்து கொழுத்துவதில்லை.
அரசியல்வாதிகளை ஆயுள் முழுவதும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கொண்டு உறங்குங்கள்.உங்கள் வீட்டுக் கூரை உங்கள் தலையில் விழும்வரைக்கும் உறங்குங்கள்.
நீங்கள் பலவந்தமாக உறக்கம் கலைக்கப்படுவீர்கள்.வீடிழந்த இன்னொரு சகோதரனின் வேதனையை நீங்கள் புரிய மறுத்தால் உங்களின் வீட்டை இழக்கவைத்து அந்த இறைவன் புரியவைப்பான்.
மூக்குடைந்த உங்கள் சகோதரனின் வேதனை புரியாவிட்டால் உங்கள் தலையை உடைத்து இறைவன் புரியவைப்பான்.
உங்கள் சகோதரனின் பசியின் கொடுமையை நீங்கள் புரிய விரும்பாவிட்டால் உங்களைப் பசிக்கவைத்து அல்லாஹ் புரியவைப்பான்
பிரச்சினை என்று வந்தால் பயந்து பின்வாங்குவதும்,இன்னொருவன் பார்த்துக் கொள்வான் என்று சுகமாக,சுயநலமாக வாழ நினைப்பதும்,இன்னொருவனை முன்னுக்கு விட்டுவிட்டு சுகமாகத் தூங்குவதும் என்று சுயநல சமூகமாக மாறிவிட்டோம்.
எனக்கென்ன.எனது மனைவி,எனது குழந்தைகள் எனது வீடு,எனது சொத்து என்று சிந்தித்த சமூகம் இறுதியில் இந்த சுயநலத்தால் அழிந்ததுதான் மிச்சம்.
சுய நலத்தையும் வேறுபாட்டையும் விட்டொதுக்குங்கள்.அரசியல்வாதியின் கால்களில் தொங்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.
எல்லோரும் ஒன்றிணைந்து உறுதியான சிவில் சமூகத்தை கட்டியெழுப்ப ஒன்று சேருங்கள்.அந்த சிவில் சமூகத்தினூடாக அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் அழுத்தம் கொடுங்கள்.உங்கள் உரிமைகளை வென்றெடுங்கள்.
நாமும் இந்த நாட்டின் பிள்ளைகள்தான்.
No comments:
Post a Comment