உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கறுப்பு ஞாயிறாக 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்து சமுத்திரத்தில் ஆழிப்பேரலையாக உருவெடுத்து, ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியதை யாரும் இலகுவில் மறக்க முடியாது.
ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் பொருட்டு 02 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களை கோரியுள்ளது.
அதன்படி இன்று(26) முற்பகல் 9.25 தொடக்கம் 9.27 வரையில் மௌன அஞ்சலி செலுத்துமாறு மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சுமாத்திரா தீவில் மையம் கொண்ட 9.1 ரிக்டர் அளவான பூகம்பம் அந்தமான், தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மலேசியா, மியன்மார் உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளில் கரையோரங்களை சூரையாடிச் சென்றது.
குறித்த இந்த ஆழிப் பேரலையானது ஆசிய நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்களை காவுகொண்டதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களை நிர்க்கதியாக்கி, கோடிக்கணக்கான சொத்துகள் உடைமைகளையும் சேதமாகின.
இந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் 30 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் இலங்கையிலும் காவுகொல்லப்பட்டன. ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் நிர்க்கதியாகினர்.
சுனாமியால் காவுகொல்லப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
உலக வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயத்தை எழுதிய ஆழிப்பேரலை ஏற்பட்டு 13 ஆண்டுகள் உருண்டோடியுள்ளபோதும், அது ஏற்படுத்திய வடுக்கள் இன்றும் எம் நெஞ்சை விட்டு நீங்காமலேயே உள்ளன.
இன்றை தினமும் ஆழிப்பேரலை நினைவுகளை மீட்டும் பல்வேறு நினைவஞ்சலி நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment