தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகொண்ட கலப்புத் தேர்தல் முறையூடான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், நாற்பத்தொரு நகரசபைகளுமாக 341 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறவுள்ள அத்தேர்தலினூடாக எண்ணாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
அத்துடன் குறித்த தேர்தலுக்காக நாடு தழுவிய ரீதியில் பதின்மூன்றாயிரம் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்கெண்ணும் பணிகளை முன்னெடுப்பதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
எனவே தேர்தல் சட்டத்தைக் கடுமையாக்கி அதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அவ்வாணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. ஆகவே தேர்தல் பிரசார நடவடிக்கை உட்பட வாக்களிப்பு, வாக்கெண்ணல் மற்றும் தேர்தலை அடுத்துவரும் தினங்களிலும் தேர்தல் சட்டத்திற்கு மதிப்பளித்து நடந்துகொள்ளுமாறும் அதனை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வாணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
ஆகவே தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்படுமாயின் ஒட்டும் தரப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் அச்சுவரொட்டிகளின் மேல் மற்றுமொரு துண்டுப்பிரசுரம் ஒன்றை ஒட்டுவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துண்டுப் பிரசுரத்தில் “ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியானது சட்டவிரோதமானது. தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் இது ஒட்டப்பட்டுள்ளது” என குறிப்பிடப்படவுள்ளது.
எனினும் கட்சிக் கூட்டம் நடைபெறும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் சுவரொட்டி ஒட்டுவதற்கு அனுமதியுள்ளது. மேலும் கட்சித் தலைவர் கலந்து கொள்ளும் கூட்டங்களின் போது கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து குறிப்பிடப்பட்ட எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிப்படுத்த முடியும். எனினும் குறித்த எல்லையை மாவட்டத்திற்குப் பொறுப்பான மேலதிக தேர்தல் ஆணையாளரே தீர்மானிக்க வேண்டும்.
அத்துடன் தேர்தல் அலுவலகங்களை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகளில் மாத்திரம் அமைத்துக்கொள்ள முடியும். மேலும் தேர்தல் பிரசாரம் தொடர்பிலான ஸ்டிகர்கள் மற்றும் கொடிகளை வேட்பாளர்களின் வாகனங்களில் மாத்திரம் காட்சிப்படுத்த முடியும். எனினும் அவ்வாகனம் எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்வது தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் குறித்த வேட்பாளர் இல்லாது பயணிக்க முடியாது.
இதேவேளை இனம், மதம்,மொழி ஆகியவற்றுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.தேர்தல் மேடைகளில் ஆற்றப்படும் உரைகளில் மாத்திரமல்லாது இணையதளம், சமூக வலைத்தளங்கள் உள்ளடங்கலாக செய்யப்படும் பிரசாரங்களிலும் குறித்த விடயம் கவனத்தில் கொள்ளப்படவுள்ளது.
மேலும் பெண் வேட்பாளர்களை நிந்திக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் தேர்தல் காலத்தில் அரச நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் அரசியல் பேசுமிடத்து அதனை ஊடகங்கள் பிரசாரப்படுத்தாது தடுக்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் பிரசார காலம் புத்தாண்டு காலமாக இருப்பதனால் புத்தாண்டு கலண்டர்களிலும் சிலர் சூட்சுமமான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். எனவே அவ்வாறான கலண்டர்களை தடைசெய்வதற்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மேலும் வாக்களிப்பிற்காக நாடு தழுவிய ரீதியில் பதின்மூன்றாயிரம் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. வாக்கெண்ணும் நிலையம் தொடர்பில் மூன்று விதமான அணுகுமுறை பயன்படுத்தப்படவுள்ளது. பெரும்பாலும் வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்கெண்ணும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. எனினும் சகல பிரதேசங்களிலும் தபால்மூல வாக்குகள் தொகுதி மத்திய நிலையத்திலேயே எண்ணப்படவுள்ளது.
வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களை பாதுகாக்கும் பணியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஆகவே ஒவ்வொரு வேட்பாளர்களும் தமது இரு பிரதிநிதிகளை குறித்த பணிக்காக நியமிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment