ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவை கூட்டத்தில் 'ஜெருசலேமின் நிலைப்பாடு' எனும் தலைப்பிடப்பட்ட தீர்மானத்திற்கு சார்பாக இலங்கை வாக்களித்துள்ளது.
இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
2017 டிசம்பர் 21 ஆந் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவை கூட்டத்தின் பத்தாவது அவசர விசேட அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'ஜெருசலேமின் நிலைப்பாடு' மீதான தீர்மானம் குறித்த ஊடகக்கேள்விகள் தொடர்பிலான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மறுமொழி
2017 டிசம்பர் 21 ஆந் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவை கூட்டத்தின் பத்தாவது அவசர விசேட அமர்வில், அரபு குழுமத்தின் தலைமையும், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் தலைமை நாடுகளுமான யேமன் மற்றும் துருக்கி ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட 'ஜெருசலேமின் நிலைப்பாடு' எனும் தலைப்பிடப்பட்ட தீர்மானத்திற்கு சார்பாக இலங்கை வாக்களித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய இரு தரப்பினரும் சட்ட விடயங்களை கருத்தில் கொண்டு, குறித்த ஐக்கிய நாடுகள் தீர்மானங்களின் அடிப்படையில் இறுதிநிலை பிரச்சினையாகவுள்ள ஜெருசலேம் தொடர்பான பிரச்சினைகளை இருநாடுகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள் மூலமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் மற்றும் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் நாடுகளுக்கான பொதுவான தலைநகரமாக ஜெருசலேம் பகிரப்பட வேண்டும் போன்ற சர்வதேச புரிதலுக்கிணையான இலங்கையின் நீண்டகால பராம்பரிய மற்றும் கொள்கை நிலைப்பாட்டுடன் இந்த தீர்மானத்திற்கு சார்பாக வாக்களிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டினை மீளுறுதி செய்து 2017 டிசம்பர் 21 ஆந் திகதி நடைபெற்ற பொதுப்பேரவை கூட்டத்தின் பத்தாவது அவசர விசேட அமர்வில் இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், இத்தீர்மானத்திற்கு சார்பான இலங்கையின் வாக்களிப்பானது, ஐக்கிய நாடுகளின் எந்தவொரு அங்கத்துவ நாடுகளுக்கும் எதிரான வாக்கு அல்ல.
சமாதானம், பாதுகாப்பு மற்றும் பரஸ்பர அங்கீகாரம் ஆகியவற்றில் இரண்டு அரசுகளும் அருகருகில் அமைவதால், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளின் தலைநகரமாக ஜெருசலேமைக் கருதி, அனைத்து விடயங்களையும் பேச்சுவார்த்தைகள் வாயிலாக நிரந்தரமாக தீர்த்துக்கொள்வதால் இரு தரப்பினரினதும் நிலையான சமாதானத்தினை எய்திக்கொள்ள முடியும் என்ற நோக்கினை உணர்ந்துகொண்டமையினால் இலங்கை இந்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
ஆதலால், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் செயற்பட்டு, நேரடியானதும், இறுதியில் தேவையான இணக்கப்பாடான தீர்வொன்றின் வாயிலாக அர்த்தமுள்ள பேச்சுவாரத்தைகள் மூலமாக தீர்வுகளுக்கு இட்டுச்செல்லவல்லதுமான நிலைமைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துதல் வேண்டும் என இலங்கை உறுதியாக நம்புகின்றது.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2017 டிசம்பர் 22 ஆந் திகதி
No comments:
Post a Comment