வாழ்வில் எல்லாவற்றையும் குடும்பத்தினரின் நலனுக்காகத் தியாகம் செய்யும் பெண்கள் சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது இல்லை.
தன் கணவன், தன் குழந்தை, தன் வீடு என்று தன் வாழ்வில் எல்லாவற்றையும் குடும்பத்தினரின் நலனுக்காகத் தியாகம் செய்பவள் பெண். காலையில் எழுவது முதல், இரவு தூங்கச் செல்வது வரை தன் குடும்பத்தினர் நலன் ஒன்றுக்காகவே தீவிரமாக உழைப்பவள்.
குடும்பத்தில் யாருக்காவது ஒருவருக்கு உடல்நலக் குறைவு என்றாலும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, பிரத்யேக உணவு தயாரித்துக்கொடுப்பது, மருந்து மாத்திரைகள் தருவது என்று அவர்கள் குணம் பெற ஓயாது கவனம் செலுத்தும் குடும்பத்தலைவிகள், தங்கள் உடல்நலத்தைப் பராமரிக்கிறார்களா என்றால், இல்லை.
உடல்நிலை சரி இல்லாவிட்டால்கூட ஏதேனும் ஒரு மாத்திரையை விழுங்கிவிட்டு, சிலர் அதைக்கூட செய்யாமல் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள்.
பெண்கள் சரியான நேரத்துக்கு உணவு உட்கொள்வது இல்லை. அதற்கு பதில், காபி, டீ மட்டும் அருந்திவிட்டு எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வர்.
தவறு: காலையில் கணவனுக்கு குழந்தைக்கு உணவு தயாரித்து, அவர்களை அனுப்பிவிட்டு, வீட்டு வேலை எல்லாம் முடித்த பின் உணவு எடுத்துக்கொள்வது அல்லது காலை உணவைத் தவிர்த்துவிட்டு மதியம் உணவு எடுத்துக்கொள்வது பெரும்பாலான குடும்பத்தலைவிகளின் பழக்கம். அதேபோல, இரவு அனைவரும் உண்ட பிறகு கடைசியில் மிச்சம் மீதியை உட்கொள்வர்.
சரி: யாராக இருந்தாலும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. மேலும், இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் இடையில், 10 மணி நேரத்துக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது.
நீண்ட இடைவெளி இருந்தால், அது செரிமானத்தைப் பாதிக்கும். அதிகம் சாப்பிட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும். இதனால், உடல் பருமன் ஏற்படும்.
காலை உணவை 8 மணிக்குள்ளும், மதிய உணவை 1-2 மணிக்குள்ளும், இரவு உணவை 7-8 மணிக்குள்ளும் சாப்பிட வேண்டும்.
அன்றைய தினத்தை திட்டமிட்டுச் செயல்பட்டாலே, நேரமின்மை பிரச்னையைத் தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment