தெய்வீகத்தன்மையும் மனிதாபிமானமும் சந்தித்துக்கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்வாக அன்று முதல் இன்று வரை நத்தார் பண்டிகை மானிட வரலாற்றில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள நத்தார் வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கோலாகலமான உலக பண்டிகையான நத்தார் கொண்டாட்டங்களுடன் இணைந்து அதனைக் கொண்டாடும் நம் நாட்டின் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு எனது நத்தார் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தெய்வீகத்தன்மையும் மனிதாபிமானமும் சந்தித்துக்கொள்ளும் ஒரு அபூர்வ நிகழ்வாக அன்று முதல் இன்று வரை நத்தார் பண்டிகை மானிட வரலாற்றில் முக்கிய பங்கினை வகித்து வருகின்றது.
விவேகமும் சமத்துவமும் அற்ற குரூரத்தனம் வேரூண்டியிருந்த காலப்பகுதியிலேயே இயேசு பிரான் இந்த பூமியில் அவதரித்தார். அவர் தெய்வீக வரம் பெற்றவராக இந்த பூமியில் பிறந்திருந்தபோதிலும்இ சமூகத்தின் தீமையினை நீக்குவதற்கான வழிகாட்டுதலை ஒரு சாதாரண மனிதர் தமது வாழ்வில் எதிர்நோக்க நேரிடும் அனைத்து இடையூறுகளையும் அனுபவித்தவாறே அவர் உலக மக்களுக்கு வழங்கினார். இதனாலேயே மனிதாபிமானத்தின் ஆழத்தையும் அதில் இருக்கவேண்டிய முன்மாதிரியான குணங்களையும் உலக மக்கள் சரியாக இனங்கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது.
தற்கால உலகமக்கள் எதிர்நோக்கியிருக்கும் பாரிய சவால்களுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான வழிமுறையும் அதனுள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு எல்லாவிதமான பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும் என்பதே அங்கு தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றது.
ஏனையவர்களின் மீது காட்டும் இரக்கம் கருணை ஆகியன தமக்கு வெற்றியைத் தருவதுடன் ஒட்டுமொத்த மனித வர்க்கத்தையே சகவாழ்வை நோக்கி இட்டுச்செல்லும் என்பதும் தெளிவாகின்றது. மனிதநேயத்திற்கு எதிராக எழுந்து நிற்கும் சகல ஆயுதங்களையும் மெளனிக்கச் செய்து அமைதியின் பாதையில் எதிர்காலத்தைப் பிரகாசமடையச் செய்ய இத்தகைய பயண பாதையில் பயணிப்பதன் மூலமே இயலுமானதாக அமையும்.
இத்தகைய மகத்தான சிந்தனையை நிஜமாக்கும் தேவாலயத்தின் அந்த இனிமையான மணியோசையானதுஇ இந்த நத்தார் காலத்தில் உலகமெங்கும் எதிரொலிக்கட்டுமாக.
உலகவாழ் சகல கிறிஸ்தவ மக்களுக்கும் அமைதியும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய நத்தார் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment