குடியால் பெண்களை விட ஆண்களுக்கு அதிக இன்பம் தூண்டப்படுகிறது. மதுவானது மனித மூளையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு இருமடங்கு அதிகம். இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது, ஆண்கள் தானே அதிகமாகக் குடிக்கிறார்கள் என்று கேட்கலாம். குடியால் பெண்களை விட ஆண்களுக்கு அதிக இன்பம் தூண்டப்படுகிறதாம். ஆணும், பெண்ணும் ஒரே அளவு மதுபானத்தை அருந்தினாலும், ஆணுக்கே அதிக இன்பம் கிட்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மதுவானது மனித மூளையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இளைஞர், இளம்பெண்களிடையே மதுபானப் பழக்கத்தை அவர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் ஆல்கஹால் உள்ள அல்லது ஆல்கஹால் இல்லாத பானம் கொடுக்கப்பட்டு, சிறப்பு பாசிட்ரான் எமிஸன் டோமோகிராபி (பெட்) ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஆல்கஹாலின் தாக்கத்தால் வெளியிடப்படும் டோபமைன் அளவை படங்களாக அளவிட்டுக் காட்டும் தொழில்நுட்பமாகும் இது.
டோபமைன் என்பது இன்பமான தாக்கத்தை ஏற்படுத்துவது. பாலுறவு, மதுபானம் அருந்துவது போன்றவற்றின் போது இது வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட ஆய்வில், ஆண்களும், பெண்களும் ஒரே அளவிலான மதுபானத்தை அருந்தினாலும் ஆண்களுக்கு அதிக அளவு டோபமைன் வெளியாவது உறுதி செய்யப்பட்டது. இன்ப உணர்வு, அடிமைத்தனம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது மூளையின் வென்ட்ரல் ஸ்ட்ரியேட்டம் பகுதி. அங்குதான் டோபமைன் வெளியீட்டு அதிகரிப்பு காணப்பட்டது.
இந்த ஆய்வுகளில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கொலம்பியா பல்கலைக்கழகத்தின் நினா அர்பன் கூறுகையில், “ஆண்களிடம் மது போதையின் தாக்கத்துக்கும், டோபமைன் அதிகமாக வெளியாவதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மதுபான நாட்டம், தொடர்ந்து அதற்கே அடிமையாகிப் போவது ஆகியவற்றுக்கு இதுவே காரணமாக இருக்கலாம்“ என்கிறார். ஆக, இயற்கையே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறது. அதனால் தான் ஆண்களில் பலர் குடிக்கு அடிமையாக இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment