புதுடெல்லி:
டெல்லியில் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 தொடரின் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி அணியும், இமாசல் அணியும் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இமாசல் அணி டெல்லி அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கியது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்தது. அந்த அணியின் காங்டா அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுதம் கம்பீரும், ரிஷப் பண்டும் களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 32 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இறுதியில், டெல்லி அணி 11.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் 38 பந்துகளில் 12 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் அடித்து 116 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்றொரு வீரரான கவுதம் கம்பீர் 30 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இப்போட்டியில் டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், 32 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் டி-20 அரங்கில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். சர்வதேச அளவில் கிறிஸ் கெயிலுக்கு (30 பந்துகள்) பின் பண்ட் இரண்டாவது இடம் பிடித்தார்.
டி-20 தொடரில் அதிவேக சதமடித்த ரிஷப் பண்டுக்கு, இந்திய வீரர் யுவராஜ் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இவரை போல் பலரும் ரிஷப் பண்டுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment