சென்னை விமான நிலையத்தில் பயணிகள் நெரிசலை சமாளிக்க ரூ.700 கோடி செலவில் புதியதாக 2 சுரங்க பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு, வெளிநாடு செல்வதற்கு 2 விமான முனையங்கள் உள்ளன. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இதனால் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் பயணிகளின் நெரிசலை கட்டுப்படுத்த ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதையொட்டி பயணிகளுக்காக புதிதாக ஒரு சுரங்க பாதையும், லக்கேஜ்களை கொண்டு செல்வதற்கு ஒரு சுரங்க பாதையும் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
ரூ.700 கோடி செலவில் இந்த சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது. பூமிக்கடியில் 10 அடி ஆழத்தில் 1.5 கி.மீட்டர் நீளத்தில் இந்த சுரங்கம் அமைக்கப்பட உள்ளது.
இதன்மூலம் பயணிகள் எளிதில் விமான பயணம் மேற்கொள்ள முடியும். லக்கேஜ்களை எளிதில் எடுத்து வர முடியும். விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
இதற்கான பணிகளை மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதை அமைத்த நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 2-வது விமான ஓடுதள பாதையை இந்த சுரங்கப்பாதை இணைக்கும் வகையில் கட்டப்படுகிறது.
இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. விமான பயணம் செய்வோர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து விட்டது.
பயணிகள் நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதியதாக 2 சுரங்கப் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணிகள் ரூ.700 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதை அமைத்த நிறுவனம் மூலம் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் பயணிகள் நெரிசல் வெகுவாக குறையும்.
No comments:
Post a Comment