மதுரையில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து: ரூ. 3 கோடி துணிகள் எரிந்து நாசம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday 4 January 2018

மதுரையில் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து: ரூ. 3 கோடி துணிகள் எரிந்து நாசம்


மதுரை:ஜன.3
மதுரை மாநகரின் முக்கிய பகுதி விளக்குத்தூண். இந்த பகுதியில் ஜவுளிக்கடைகள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இங்குள்ள பத்து தூண் சந்து பகுதி குறுகலான பகுதியாக உள்ளது. இங்கு கணேசன் என்பவர் ஜே.ஆர்.கே. என்ற பெரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். மொத்த வியாபாரம் நடைபெறும் இங்கு, கீழ் பகுதியில் விற்பனையகமும் மாடியில் கிட்டங்கியும் செயல்பட்டு வருகிறது.
கிட்டங்கி மற்றும் கடையில் சுமார் ரூ. 3 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் இருந்ததாக தெரிகிறது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கணேசன் மற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த கடையின் மாடி கிட்டங்கியில் திடீரென்று தீப்பிடித்தது. இதனை அந்த பகுதியில் இருப்பவர்கள் பார்த்து, கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் சம்பவ இடம் விரைந்து வந்தார். தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திடீர் நகர் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.
குறுகலான இடத்தில் கடை இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கிடையில் கடையின் மேல் பகுதியில் எரிந்த ‘தீ’ கீழ் பகுதிக்கும் பரவியது.
இதனை தொடர்ந்து தல்லாகுளம், அனுப்பானடி தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 3 தீயணைப்பு நிலைய வீரர்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பக்கத்து கடைகளின் மாடிகளுக்கும் சென்று அங்கிருந்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். தண்ணீருக்காக மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் சம்பவ இடம் வரவழைக்கப்பட்டன. சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காலை 9.30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்தின் போது ஜவுளிக்கடை கட்டிடத்தின் பல பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் கட்டிடம் இடிந்து விடுமோ என்ற அச்சம் நிலவியது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages