மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் வீம்பு பிடிப்பதாலேயே பெரும்பாலும் பிரச்சனைகள் வருகின்றன. மருமகள் கொஞ்சம் இறங்கி வந்தால் நல்ல பெயரைச் சம்பாதிக்கலாம்.
\புகுந்த வீட்டிற்குச் செல்லும் ஒரு பெண், நல்ல பெயரைச் சம்பாதிப்பது அவ்வளவு ஈஸியான காரியமில்லை. மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் வீம்பு பிடிப்பதாலேயே பெரும்பாலும் பிரச்சனைகள் வருகின்றன.
வயதாகிவிட்ட காரணத்தினால் மாமியார்களுக்கு எதையும் சொல்லிப் புரிய வைக்க முடியாது. எனவே, மருமகள்கள் கொஞ்சம் மனது வைத்தால், கொஞ்சம் இறங்கி வந்தால், புகுந்த வீட்டில் அவர்கள் நல்ல பெயரைச் சம்பாதிக்கலாம். இதோ அதற்கான சில டிப்ஸ்:
நீங்கள் ஒரு புது மருமகள் என்பதைப் போல, மாமியார் என்ற ‘பதவி’யும் அவர்களுக்குப் புதிதுதான். எனவே, எதற்கும் பயப்படாமல் ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற மனநிலையுடன் இருங்கள். நல்லதையே பேசுங்கள், நல்லதையே செய்யுங்கள். மாமியார் மனதும் மாறும்!
புகுந்த வீட்டுக்கு செல்லும் நீங்கள், உங்கள் மாமியாரை உங்கள் தாய்க்கு சமமாக நடத்துங்கள். உங்கள் அம்மாவுக்கு என்ன என்னவெல்லாம் செய்ய நினைக்கிறீர்களோ, அவற்றை உங்கள் மாமியாருக்கும் செய்யுங்கள். (நல்ல விஷயங்கள் மட்டும் தான்!)
உங்கள் கணவருக்கும், அவருடைய தாய்க்கும் இடையில் திடீரென்று நீங்கள் வந்திருப்பதால், உங்கள் மாமியார் சிறிது தடுமாறத் தான் செய்வார். உங்களுடன் எந்த விஷயத்திலும் உங்கள் மாமியார் மல்லுக்கு நிற்கத்தான் செய்வார். எனவே, கொஞ்சம் உணர்வுப் பூர்வமாக இந்த விஷயத்தை அணுகினால், மாமியாரை ‘வீழ்த்தலாம்’!
உங்கள் மாமியாரை எப்போதும் மரியாதையாக நடத்துங்கள். வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அவர் கடந்து வந்திருப்பார். அனைத்தையும் பற்றி அவருடன் உண்மையான அக்கறையுடன் கேளுங்கள். உங்களிடம் அவருடைய அன்பு பெருக ஆரம்பிக்கும்.
புகுந்த வீட்டுக்குள் நீங்கள் போகும் போது, அங்கு உள்ளவர்களைப் பற்றி நீங்களோ அல்லது உங்களைப் பற்றி அவர்களோ அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது. கொஞ்சம் நேரம் கொடுங்கள்; விட்டுப் பிடியுங்கள். அவர்கள் மனதை வெல்லலாம்!
எந்த முக்கியமான விஷயமானாலும் சரி, அவற்றை உங்கள் மாமனார்-மாமியாரிடம் உடனடியாகத் தெரிவித்து விடுங்கள். உங்கள் மாமனார்-மாமியாருடைய அறிவுரைகளை எப்போதும் நிராகரிக்க வேண்டாம். உங்களை விட அவர்களுக்கு வயதும் அனுபவமும் அதிகம் தான். அவர்களுடைய சில அறிவுரைகள் உங்களுக்கு சரியாகப் படவில்லையென்றால், வேறு நல்ல ஐடியாக்களை பொறுமையாக எடுத்துக் கூறுங்கள். நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
உங்கள் குழந்தைகளை எப்போதும் உங்கள் மாமனார்-மாமியாருடன் இருக்க விடுங்கள். தங்கள் பிள்ளைகள் மேல் இருக்கும் அன்பை விட, தங்களுடைய பேரன்-பேத்திகளை கவனித்துக் கொள்வதில் அவர்களுக்கு அலாதிப் பிரியம் இருக்கத் தான் செய்யும். உங்களிடமும் அவர்களுடைய அன்பு அதிகரிக்கும்.
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி, தடதடவென்று கோபம் கொண்டு பொரிந்துவிடாதீர்கள். கணவர்-மாமனார்-மாமியார் என்று அனைவரையும் ஒன்றாகக் கூப்பிட்டு, அவர்களுடன் கலந்து பேசி, பிரச்சனையை சுமூகமாகத் தீர்த்து வையுங்கள்
No comments:
Post a Comment