மராட்டியம் மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதால், பேருந்து, கார், ஆட்டோ என பெரும்பாலான போக்குவரத்து முடங்கியுள்ளது.
மும்பை:
மராட்டியம் மாநிலம் புனே அருகே உள்ள, பீமா கோரேகாவ்ன் என்ற பகுதியில், 1818 -ம் ஆண்டு நடந்த போரில், மகர் எனப்படும் தலித் இனத்தவர்கள் பங்கேற்றனர். அந்த போரின் 200-வது வெற்றி விழா கொண்டாட்டத்தின் போது, தலித்மக்களுக்கும், மராத்தா இன மக்களுக்கும் இடையே மோதல் வன்முறையாக மாறியது. ஓர் இளைஞர் உயிரிழந்தார். இந்த வன்முறை சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியது.
இந்த கலவரத்தில் போலீஸ் வேன் உள்பட 15 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன. இதனால், புனே நகரம் முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார்.போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து பதற்றம் நிலவியதால் ஏராளமான மாநில ரிசர்வ் படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்தநிலையில், மோதலில் வாலிபர் பலியான சம்பவத்தை கண்டித்து, நேற்று மாநிலம் முழுவதும் குறிப்பிட்ட சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மும்பையில் செம்பூர், கோவண்டி பகுதியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுக வழித்தடத்தில் ரெயில்சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆட்டோவிற்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்
புனேயில் ஏற்பட்ட இந்த மோதல் மும்பை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவியது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 134 அரசு பஸ்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், மராட்டியத்தின் பிரதான நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வன்முறையைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தானே, புனே உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேருந்து, கார், ஆட்டோ என பெரும்பாலான போக்குவரத்து முடங்கியதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பாதுகாப்பு கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வன்முறையாளர்களை கட்டுப்படுத்த துணை ராணுவத்தினர், ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment