சீனப் படைகள் அருணாசல பிரதேசத்தின் உள்ளே சுமார் 200 மீட்டர் தூரம் வரை ஊடுருவி வந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
அருணாசல பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அடிக்கடி அருணாசல பிரதேச எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவி வந்து விட்டு செல்கின்றன. இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சீன ராணுவம் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.
சமீபத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் டோக்லாம் எல்லைப் பிரச்சினை பதற்றத்தை ஏற்படுத்தி தணிந்த நிலையில் தற்போது சீனா, அருணாசல பிரதேசத்தின் உள்ளே சுமார் 200 மீட்டர் தூரம் வரை ஊடுருவி வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அருணாசல பிரதேசம்-சீனா எல்லையில் பைசிங் எனும் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்துக்குள்தான் சீனப்படைகள் ஊடுருவி வந்து தங்கியுள்ளன. இது பற்றி பைசிங் கிராம மக்கள் இந்திய உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று பார்த்தனர்.
அப்போது சீனப் படைகள் அந்த கிராமத்தை சீனாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் ரோடு போடும் எந்திரங்களுடன் வந்திருப்பது தெரிந்தது. சாலை அமைக்க பாதையை அகலப்படுத்த 2 பெரிய புல்டோசர்களையும் சீனப் படைகள் கொண்டு வந்திருந்தன.
இதற்கு இந்திய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சீனப்படை வீரர்களிடம் திரும்பி செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அதை ஏற்க சீனப்படைகள் மறுத்துவிட்டன.
இதைத் தொடர்ந்து பைசிங் கிராமத்தில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா கொண்டு வந்த சாலை போடும் எந்திரங்களையும், புல்டோசர்களையும் இந்திய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே சீனப்படைகள் நேற்று பின்வாங்கி சென்று விட்டதாக ஒரு தகவல் வெளியானது. சாலை போட கொண்டு வந்திருந்த மூலப்பொருட்களை அந்த கிராமத்தில் போட்டு விட்டு சீனப் படைகள் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சீனப்படையில் ஒருபிரிவு தொடர்ந்து பைசிங் கிராமம் அருகில் முகாமிட்டு இருப்பதாக இன்று காலை தகவல்கள் வெளியானது. இதனால் அருணாசல பிரதேச எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
No comments:
Post a Comment