இரண்டு இலட்சம் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவகையில் மிகவும் அழகான நவீன முறையில் நகரம் ஒன்றை நிர்மாணித்து சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கும் வசதிகளை பெற்றுக்கொடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரத்திட்ட வேலைத்திட்டங்களை நேற்று பார்வையிடச்சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
சீனா துறைமுக நிறுவனத்தினால் கடல் நிலத்தை நிரப்பி 99வருடங்களில் இந்த இடத்தில் நகரம் ஒன்றை ஏற்படுத்துவோம். இந்த நகரம் பயன்படும்வகையில் முழு இந்து சமுத்திரத்துக்கும் பொருத்தமான நிதி வர்த்தக மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அதற்காக துறைமுக நகரமாகிய இந்த பிரதேசத்தில் பிரத்தியேகமாக நிதி மாவட்டம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். அத்துடன் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பிரதேசத்தில் இரண்டு இலட்சம் மக்கள் வாழ்வதற்கு ஏற்றவகையில் மிகவும் அழகான நவீன முறையில் நகரம் ஒன்றை நிர்மாணிப்போம். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருக்கும் வசதிகள் அனைத்தும் இந்த நகரத்துக்கு பெற்றுக்கொடுப்போம். இது சீன துறைமுக நிறுவனத்தின் பிரதான முதலீடாகும்.
அத்துடன் இந்த வேலைத்திட்டம் நாட்டின் பொருளாதாரத்துக்கு புதியதொரு சக்தியை ஏற்படுத்தும் வேலைத்திட்டமாகவே பார்க்கின்றோம். அத்துடன் இந்த இடத்தில் இருந்துகொண்டே எமது மக்களுக்கு வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நிதிவசதிகளை பெற்றுக்கொள்ள தேவையான சட்ட மற்றும் வணிக சேவைகளை பெற்றுக்கொடுப்போம். இதற்கு அப்பால் இந்த பிரதேசத்தில் எமது மக்கள் பெருமைப்படும் வகையில் மகிழ்ச்சியாக இருக்க பாரிய பூங்காவொன்றை ஏற்படுத்த இருக்கின்றோம்.
அத்துடன் 2020ஆகும் போது இந்த துறைமுக நகரத்தின் அடிப்படை வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய கட்டட வேலைகளை பூர்த்திசெய்ய இருக்கின்றோம். இதன் மூலம் நாங்கள் நினைத்தும் பார்க்க முடியாத நகரம் ஒன்று இங்கு அமையப்போகின்றது. இது இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையத்துக்கான வேலைத்திட்டங்களில் ஒரு பகுதியாகும். துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றின் சேவையுடன் உற்பத்தி தொழிற்சாலைகளை ஏற்படுத்துவது, நிதி சேவைகளை ஏற்படுத்துவது மற்றும் சுற்றுலா வேலைத்திட்டங்களை ஏற்படுத்தும் திட்டத்திலே அரசாங்கம் என்றவகையில் இந்த வேலைத்திட்டங்களை மேற்கொண்டு செல்கின்றோம்.
அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த வேலைத்திட்டங்களை நாங்கள் பொறுப்பேற்றுள்ளோம். இதற்கு தேவையான சட்டங்களை இந்த வருடம் முன்வைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அனைத்தையும் ஒரேதடவையில் செய்துமுடிக்க இயலாது. தற்போது நாங்கள் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இலங்கை கடனுக்குள் மூழ்கியிருந்ததற்கு பதிலாக இலங்கையின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தி, சிறந்த முறையில் வாழ்வதற்கு முடியுமான, தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் பொருளாதாரத்தை ஏற்படுத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment