மது வரி திணைக்களத்தின் வட மேல் மாகாண உதவி ஆணையாளரின் வீட்டின் மீது நேற்று அதிகாலை கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மது வரி திணைக்களத்தின் வட மேல் மாகாண உதவி ஆணையாளர் லெஸ்லி ஜயரத்ன ரணவீரவின் பன்னலை மாகந்துர, கோரலேகம பகுதியில் அமைந்துள்ள இரு மாடி வீட்டின் மீதே இந்த கைக்குன்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பன்னலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலானது நேற்று அதிகாலை 2.00 மணியளவில், மது வரி திணைக்களத்தின் வட மேல் மாகாண உதவி ஆணையாளர் லெஸ்லி ஜயரத்ன தனது மனைவி பிள்ளைகளுடன் தனது வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையொன்றில் உறங்கிக்கொண்டிருந்த போது நடத்தப்பட்டுள்ளது.
வீசப்பட்ட கைக்குண்டானது வீட்டின் கீழ் மாடியுடன் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் விழுந்துள்ளதுடன் இதன்போது மது வரி திணைக்களத்தின் வட மேல் மாகாண உதவி ஆணையாளர் லெஸ்லி ஜயரத்னவின் உத்தியோகபூர்வ வாகனம், அவரது தனிப்பட்ட வாகனங்களான வேன், பஸ் ஆகியவற்றுக்கு இதன்போது சேதம் ஏற்பட்டுள்ளது. உதவி ஆணையா ளருக்கோ அவரது குடும்பத்தாருக்கோ இதன்போது எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நிலையில் சம்பவத்தை அடுத்து குருணாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஏ.ஈ. மகேந்ராவின் உத்தரவுக்கு அமைய குளியாப்பிட்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கபில கட்டுபிட்டியவின் நேரடி கட்டுப்பாட்டில் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சர் நிமல் பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய விசாரணைக்கு என மூன்று பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பன்னலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர். குமாரதாஸவின் தலைமையில் அந்த பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு மற்றும் குளியாப்பிட்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ் உள்ள தீர்க்கப்படாத குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கி இந்த மூன்று பொலிஸ் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், மது வரி திணைக்களத்தின் வட மேல் மாகாண உதவி ஆணையாளர் லெஸ்லி ஜயரத்னவின் வீட்டு கராஜில் தங்கியிருந்ததாக கூறப்படும் மூவரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளனர். அவர்களது வாக்குமூலத்தில் குண்டு வீசப்பட்டதன் பின்னர் வீட்டின் முன்னால் நின்றிருந்த முச்சக்கர வண்டியொன்று உடன் இயக்கப்பட்டு வேகமாக சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன் மது வரி திணைக்களத்தின் வட மேல் மாகாண உதவி ஆணையாளர் லெஸ்லி ஜயரத்னவின் வாக்குமூலத்தின் பிரகாரம், பிரதேசத்தின் கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பில் முன்னின்று செயற்பட்டமையால் அதற்கு பழி வாங்கும் நோக்கில் கைக்குண்டு வீச்சு நடத்தப்பட்டதா எனும் தோரணை யிலும் விசாரணைகள் முன்னெ டுக்கப்பட் டுள்ளன.
No comments:
Post a Comment