.இஸ்லாமாபாத் : பாக்.,ன் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறி இருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராணுவ தளபதி கூறிய இந்த கருத்திற்கு தற்போது பாக்., பதிலளித்திருப்பதுடன், இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டலையும் விடுத்துள்ளது.
பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய ராணுவ தளபதியின் பேச்சு மிகவும் பொறுப்பற்றது. இது அவரது பதவிக்கு ஏற்றதல்ல. இதன் மூலம் அவர் அணுஆயுத சண்டைக்கு அழைப்பு விடுகிறார். ஒருவேளை அது தான் இந்தியாவின் ஆசை என்றால், அவர்கள் வந்து எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும். யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது விரைவில் காட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இவரைத் தொடர்ந்து பாக்., வெளியுறவு விவகாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பாசில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய ராணுவ தளபதியின் பொறுப்பற்ற, மிரட்டல் தோணியிலான பேச்சு இந்தியாவின் கெட்ட எண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது. பாக்.,ம் தனது தாக்குதல், தடுப்பு திறனை காட்டும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எந்த வகையில் அவர்கள் எங்களை தவறாக எடைபோட வேண்டாம். பாக்., தன்னை காத்துக் கொள்ள முழு திறனுடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment