.அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிபாயும் காளைகளை அடக்கும் முயற்சியில் மாடுபிடி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மதுரை:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். ஆனால் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றவை.
இங்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக கடந்த ஒரு வாரமாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வந்தனர். அவனியாபுரத்தில் இன்றும் (14-ந் தேதி), பாலமேட்டில் 15-ந் தேதியும், அலங்காநல்லூரில் 16-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
அவனியாபுரம், பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக வீரர்கள், காளைகள் பதிவு நடைபெற்றது. இதில் அவனியாபுரத்தில் 675 வீரர்களும், 954 காளைகளும் பங்கேற்க உள்ளன. போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மது குடித்து வருவோர், ஆவணங்கள் இல்லாதோர், உடல் தகுதி இல்லாதோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிகாரிகள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளனர்.
போட்டி நாளான இன்று, வீரர்களுக்கு இறுதிகட்ட மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. மாடு பிடி வீரர்களுக்கு போட்டிக்கான சீருடையான மஞ்சள் கலர் பனியனும், பச்சை கலர் அரை டிராயரும் வழங்கப்பட்டு, ஜல்லிக்கட்டு திடலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டையொட்டி அவனியாபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற ஆம்புலன்சு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதே போல் காளைகளுக்கும் இறுதிக்கட்ட சோதனை நடத்தப்பட்டன. காளைகளின் கண்கள், பற்கள் சோதனை செய்யப்பட்டது. கூர்மையான கொம்புகளை கொண்ட காளைகள், தனியே கொண்டு செல்லப்பட்டு அறம் மூலம் கொம்புகள் தேய்த்து விடப்பட்டன. பின்னர் அவை அனைத்தும், ஒதுக்கப்பட்ட எண் வரிசைப்படி, வாடிவாசல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஜல்லிக்கட்டு திடலில் மாடுபிடி வீரர்கள், காளைகள் பாதுகாப்பிற்காக சுமார் 200 அடி தூரத்திற்கு தேங்காய் நார்கள் பரப்பப்பட்டு உள்ளது.
இதே போல் பார்வையாளர்கள் பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று காலை காவல் துறை அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட்டனர். தொடர்ந்து மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஒத்துழைப்புதர அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அதன் பின்னர் மதுரை மாவட்ட ஆட்சியர் விதிமுறைகளை கடைபிடிக்க உறுதிமொழி வாசகங்களை வாசிக்க மாடுபிடி வீரர்கள் அதனை திருப்பிச் சொல்லி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செல்லூர்ராஜூ, எம்.எல்.ஏ. போஸ் முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது.
அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்து வருகிறது. அவற்றை பிடிக்க மாடுபிடி வீரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கியும் வருகிறார்கள். காளைகளின் திமிலை பிடித்தே அடக்க வேண்டும். 15 மீட்டர் தூரத்திற்குள் பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகளை கருத்தில் கொண்டு வீரர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்து உள்ளனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உள்ளனர்.
வாடிவாசல் வழியாக வரும் சில காளைகள், களத்தில் நின்று அங்கும், இங்கும் திரும்பி வீரர்களை விரட்டவும் செய்கிறது. போட்டியை முன்னிட்டு, அவனியாபுரம் பகுதியில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். 20 ஆம்புலன்ஸ்கள், 2 கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் வீரர்களுக்கு தங்க காசு, தங்க சங்கிலி, பீரோ, கட்டில், சைக்கிள், பாத்திரங்கள் மற்றும் பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment