பெண்களில் அனைத்து வயதினருக்கும் வயிற்று வலி இல்லாதவர்களைக் காண்பது அரிது. எந்த வகையான வயிற்று வலிக்கு எப்படி தீர்வு காண வேண்டும் என்று பார்க்கலாம்.
பெண்களில் அனைத்து வயதினருக்கும் வயிற்று வலி இல்லாதவர்களைக் காண்பது அரிது. எல்லாருடைய வயிற்று வலிக்கும் காரணங்கள் வேறு வேறு. காரணங்களுக்கேற்ப சிகிச்சைகளும் வேறுபடும்.
கருமுட்டை வெளியாகிற நாட்களில், அதாவது மாதவிலக்கு முடிந்த பத்து நாட்களில் இடுப்புப் பகுதியில் வலி வரும். இது பயப்பட வேண்டிய வலியல்ல. ஒன்றிரண்டு நாட்களில் தானாகச் சரியாகிவிடும். குழந்தை வேண்டிக் காத்திருப்போருக்கு அந்த நாளில் உறவு கொள்ள வேண்டும் என உணர்த்துகிற அறிகுறியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
Premenstrual Syndrome எனப்படுகிற பி.எம்.எஸ். பிரச்சனையின் அறிகுறியாகவும் இடுப்பு வலி ஏற்படும். இந்த வலி இடுப்பில் மட்டுமின்றி, பின் முதுகுப் பகுதிக்கும் பரவும். ஒன்று முதல் 3 நாட்கள் நீடிக்கும். ஒவ்வொரு மாதமும் கர்ப்பப் பையானது திசுப்படலம் ஒன்றை உருவாக்கும். அந்தப் பகுதியில்தான் கருவானது பதிந்து வளரும்.
கருத்தரிக்காத பட்சத்தில் அந்தப் படலம் உதிர்ந்து, வெளியேறும். கர்ப்பப் பையானது அந்தத் திசுப்படலத்தை சிரமப்பட்டு வெளித்தள்ளுவதால் ஏற்படுகிற வலியே அது. இந்த வலிக்கு சாதாரண வலி நிவாரண மாத்திரைகளோ, வெந்நீர் ஒத்தடமோ போதும். உடற்பயிற்சி செய்வதும் வலியிலிருந்து நிவாரணம் தரும்.
தாங்க முடியாத வலி ஏற்பட்டால் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிரத்யேக மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். சினைக் குழாய்களில் கருத்தரிக்கும்போதும் இடுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கடுமையான வலி ஏற்படும். உதிரப்போக்கு, வாந்தி, தலைசுற்றல் போன்றவை கூடுதலாக சேர்ந்து கொள்ளும். இது உடனடியாகக் கவனிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்சனை. இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம்.
Pelvic inflammatory disease எனப்படுகிற பிரச்னையும் இடுப்பு வலியை அறிகுறியாகக் காட்டும். இந்தப் பிரச்சனை குணப்படுத்தக் கூடியதே. கவனிக்காமல் விட்டால் கர்ப்பப்பை, சினைப்பைகளை முழுமையாகப் பாதிக்கலாம். வயிற்று வலி, காய்ச்சல், பிறப்புறுப்பில் அசாதாரணக் கசிவு, சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி போன்றவையும் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்வதன் மூலம் குணப்படுத்தலாம். தீவிரமானால் சிகிச்சை தேவைப்படலாம்
ஃபைப்ராய்டு பிரச்சனையின் மிக முக்கிய அறிகுறியே இடுப்பு வலிதான். கட்டி போன்ற ஃபைப்ராய்டுகள், புற்றுநோய் அபாயம் இல்லாதவை. 30 முதல் 40 வயதுப் பெண்களுக்கு இது மிகவும் சகஜம். சில பெண்களுக்கு அதிகமான ரத்தப் போக்கு, வயிறு மற்றும் இடுப்பு வலி, போன்றவையும் இருக்கும். அப்படி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment