குடியுரிமை அதிகாரிகளின் ஆய்வு தேவைப்படுவோருக்கு ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்டு வழங்கும் மத்திய அரசு முடிவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தற்போது நீல நிறத்தில் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. இதைத்தவிர வெளிநாடுகளில் பணிபுரியும் இந்திய தூதர்களுக்கு சிவப்பு நிறத்திலும், அதிகாரிகளுக்கு வெள்ளை நிறத்திலும் பாஸ்போர்ட்டு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் குடியுரிமை அதிகாரிகளின் ஆய்வு தேவைப்படுவோருக்கு இனிமேல் ஆரஞ்சு நிற அட்டையுடன் கூடிய பாஸ்போர்ட்டு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது பெரும்பாலும் தொழிலாளர்களுக்கே தேவைப்படும் என்பதால் பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘இந்தியாவின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை பா.ஜனதாவின் பாரபட்ச மனநிலையை காட்டுகிறது’ என்று தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment