கேப் டவுன்: தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கு, இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகிஉ உள்ளார்.தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுன், நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில், இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.‘கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்த தொடக்க வீரர் தவான், முழுவதுமாக குணமடைந்து உடல்தகுதியை நிரூபித்துள்ளார். இதையடுத்து, முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடந்த இரண்டு நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உள்ளூர் மருத்துவக் குழுவின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது. ஜடேஜாவை களமிறக்குவது குறித்து போட்டி தொடங்குவதற்கு முன்பாக முடிவு செய்யப்படும்’ என இந்திய அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்கா மண்ணில் இதுவரை 6 டெஸ்ட் தொடர்களை சந்தித்துள்ள இந்தியா, ஒரு தொடரை கூட வென்றதில்லை என்ற மோசமான வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய கட்டாயத்தில் கோஹ்லி & கோ உள்ளது குறிப்பிடத்தக்கது. ‘தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களில் வென்று ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, தென் ஆப்ரிக்காவில் வெற்றி பெற வேண்டும் என்றால்... புதிய பந்துடன் வேகப் பந்துவீச்சாளர்கள் நடத்தும் தாக்குதலை சமாளிப்பது அவசியம். அதாவது, முதல் இரண்டு மணி நேர ஆட்டத்தில் தாக்குப்பிடிப்பதை பொறுத்தே ஆட்டத்துன் போக்கு அமையும்’ என்று முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
மொத்தம் 51 டெஸ்ட் சதங்களை பதிவு செய்துள்ள சச்சின், தென் ஆப்ரிக்காவில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களை விளாசியுள்ளார். அது பற்றிய விவரம்: 1992, நவ. 26 ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் ஸ்டேடியம் - 111 ரன், கேப் டவுன் நியூலேண்ட்ஸ் மைதானம் 1997, ஜன. 2ல் 169 ரன், புளோயம்போன்டீன் குட்இயர் பார்க் மைதானம் 2001, நவ. 3ல் 155 ரன், செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானம் 2010, டிச. 16ல் 111*, கேப் டவுன் நியூலேண்ட்ஸ் மைதானம் 2011, ஜன. 2ல் 146 ரன்.
ஒயிட்வாஷ் ஆனாலும் முதலிடத்துக்கு ஆபத்தில்லை!
டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியா 124 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்கா 111 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 13 புள்ளிகள் வித்தியாசம் உள்ள நிலையில், தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என்ற கணக்கில் இழந்தாலும் நம்பர் அந்தஸ்து பறிபோகாது. ஆனால், தென் ஆப்ரிக்கா ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்தால், இந்தியாவுடன் முதலிடத்தை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகும். இரு அணிகளும் 118 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.
அதே சமயம் இந்தியா 3-0 என வென்றால் 128 புள்ளிகளுடன் இடைவெளியை அதிகரித்துக் கொள்ளலாம். தென் ஆப்ரிக்கா 107 புள்ளிகளுடன் பின்தங்கும். ஆஷஸ் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு 3வது இடம் உறுதியாகி உள்ளது.
No comments:
Post a Comment