சென்னை: சென்னை காமராஜர் சாலையில் இளைஞர்களின் பைக் ரேஸ் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று பைக் ரேஸில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. புத்தாண்டு தினத்தில் போலீசாரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையும் மீறி வாகனங்களில் அதிவேகமாக சென்று பலர் படுகாயம் அடைந்தனர். புத்தாண்டு தினத்தில் மட்டும் 170 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் வைத்திருந்த சாலை தடுப்பை இளைஞர்கள் தங்கள் பைக்கில இழுத்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை, அண்ணாசாலை, கோயம்பேடு, கிழக்கு கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இளைஞர்கள் பைக்குகளை அதிவேகமாக ஓட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். 5 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 2014ம் ஆண்டு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 119 பேர் காயமடைந்தனர். 5 பேர் உயிரிழந்தனர். 2015ம் ஆண்டு 58 பேர் காயமடைந்தனர், 5 பேர் உயிரிழந்தனர். 2016ம் ஆண்டு 296 பேர் காயமடைந்தனர், 4 பேர் உயிரிழந்தனர். 2017ம் ஆண்டு 170 பேர் காயமடைந்தனர், 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதே நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. வலியத் தேடும் ஆபத்தை இளைஞர்கள் எப்போது உணர்வார்கள் என்று சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment