வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவம் வணிக நோக்குடனேயே செயற்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
வாரத்திற்கொரு கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் மாத்திரம் அல்லாது கடற்படையினர் மற்றும் விமானப் படையினரும் வட மாகாணத்தில் வணிக செயற்பாடுகளில் ஈடுபடுவதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
உணவகங்கள், சுற்றுலா புகலிடங்கள், வரவேற்பு மண்டபங்கள், சிற்றுண்டிச்சாலைகள் போன்றவற்றை படையினர் நடத்திச் செல்வதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தவிர விவசாய நிலங்கள், தோட்டங்கள் மற்றும் பண்ணைகளும் படையினர் வசமுள்ளதாக அவர் கூறியுள்ளார்
இத்தகைய செயற்பாடுகள் உள்ளூர் வர்த்தகர்களுக்கு நியாயமற்ற போட்டியாக அமைந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், இராணுவம் என்ன செய்ய வேண்டும் என்பவற்றை அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் எடுத்துக்கூறுவது தமது கடமை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் சுமார் 6000 ஏக்கர் காணியை வட மாகாணத்தில் பிடித்து வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் தனியாருக்கு சொந்தமான காணி மாத்திரம் சிறிது சிறிதாக திருப்பிக் கையளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment