கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் மக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுத்தை செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட ஒன்றென்பது தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட சிறுத்தையின் உடலில் வழமைக்கு மாறாக கொழுப்புப் படிந்திருந்தமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரித்தலை கால்நடை வைத்தியசாலையில் மிருக வைத்தியர் அகலங்க பினிதியவினால் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த சிறுத்தையின் உடலில் காணப்பட்ட கொழுப்புப் படிவம் காரணமாக அது காட்டில் வளர்ந்த விலங்கு அல்லவென்பதை வைத்திய அதிகாரி தமது அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்தோடு, கூண்டில் அடைத்து வளக்கப்படுகின்ற விலங்குகளின் உடலிலேயே இவ்வாறு கொழுப்பு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் அடிப்படையில் இந்த சிறுத்தை வளக்கப்பட்ட ஒன்றென வன ஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அது குறித்து கருத்து வெளியிட முடியாது என பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கால்நடை வைத்தியர் அகலங்க பின்தெனிய நியூஸ் பெஸ்ட்டுக்குத் தெரிவித்தார்.
இந்த அறிக்கை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயக் சந்தன சூரியபண்டாரவிடம் நாம் வினவியபோது, பிரேத பரிசோதனை அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னரே அது தொடர்பில் விளக்கமளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இராணு வீரர்கள் சிலர் முகாமில் இருந்த நாய் ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரிவித்து பிரதேசத்தில் அதனைத் தேடுவதற்காக வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
1978ஆம் ஆண்டிலிருந்து இங்கு குடியிருக்கிறேன். இதுவரை இவ்வாறு சிறுத்தை வந்த வரலாறு இல்லை. 21ஆம் திகதி வந்த சிறுத்தை மட்டுமே. காட்டிலிருந்து வந்தததற்கு அப்பாற்பட்டு வளர்க்கப்பட்டது போன்றே எங்களுக்குத் தென்படுகின்றது. இந்த சிறுத்தை இங்கே யாரோ வளர்த்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகின்றது. சம்பவ தினத்திற்கு 2 நாட்களுக்கு முன்னர், கிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினர் வந்து, மக்களிடம் எல்சேசன் பெரிய நாய் வந்ததாகவும் உடலில் புள்ளி புள்ளி இருந்த நாயென்றும் கூறியதுடன் ஒப்பிடும்போது, அவர்களால் வளர்க்கப்பட்டது என சந்தேகிக்கிறோம். யாரும் வளர்த்திருந்தால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.இராணுவ முகாமில் வளர்த்த சிறுத்தை அல்லது இராணுவ அதிகாரிகளால் வளர்க்கப்பட்ட சிறுத்தை மக்கள் மீது பாய்வது கடிப்பதற்கு அல்ல. அது மக்களுடன் நெருங்கியிருப்பதனால் அவ்வாறு செயற்படும். அதனாலே அந்த சிறுத்தை மக்கள் மீது பாய்ந்தபோது மக்கள் அச்சமடைந்து அதனை கொலை செய்திருப்பர். இந்தக் கொலையை நியாயப்படுத்த முடியாது. அதேபோன்று இராணுவ முகாமில் சிறுத்தை வளர்க்கப்பட்டுள்ளமை யையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது வனஜீவராசிகள் சட்டத்தை மீறும் செயலாகும். இந்த சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது போன்று இந்த சிறுத்தையை இராணுவ முகாமில் வளர்த்த இராணுவ அதிகாரிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என சூழலியலாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.அதேநேரம், குறித்த முகாமில் சிறுத்தை வளர்க்கப்படவில்லை என்பதனை என்னால் கூற முடியும். ஏதாவது ஒரு வகையில் இராணுவத்தினால் அந்த சிறுத்தை வளர்க்கப்பட்டதாக உறுதியானால் தண்டனை வழங்க வேண்டும். இராணுவத்தில் இவ்வாறு சிறுத்தைகளை வளர்க்க முடியாது. நாய் தொடர்பிலும் நான் ஆராய்ந்து பார்த்தேன். முகாமில் முன்பு இருந்தவர்கள் நாய் ஒன்றை விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் அந்த நாய் சில நாட்களின் பின்னர் காணாமல் போயுள்ளது. அந்த நாய் யாரையாவது கடிக்கலாம் என்ற அச்சத்தினாலே அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சில நாட்களின் பின்னர் நாய் கிடைத்துள்ளது. சிறுத்தையை இராணுவத்தினர் வளர்த்தார்கள் என்பதனை என்னால் சந்தேகிக்க முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
கிளிநொச்சி – அம்பாள்குளம் கிராமத்திற்குள் கடந்த மாதம் 21 ஆம் திகதி நுழைந்த சிறுத்தை பொதுமக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை நினைவுகூரத்தக்கது.
No comments:
Post a Comment