ஷோபா சக்தி.
- அண்ணா, ஒரு பதிலில் தங்களுக்கு அசோகமித்திரன் கவரவில்லை என்றீர்கள். சென்ற முறை ஜெயமோகனின் இலக்கிய கட்டுரைகள் முக்கியமானவை என்கிறீர்கள். ஜெயமோகன் அசோகமித்திரனை தமிழின் ஒரு சிகரமாக கொண்டாடுகிறார். அவ்வாறெனின் அவர் இலக்கிய பார்வையை நீங்கள் ஏற்பீர்களா? எவ்வகையில் அவர் கட்டுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன?
- நண்பா! ஜெயமோகனின் இலக்கியம் குறித்த கட்டுரைகள் முக்கியமானவை என்றுதான் சொன்னேனே தவிர அவை வேத வசனங்கள் என்று சொல்லவில்லை. இலக்கியத்தின் நுண் தடங்களையும் வெற்று வார்த்தைகளால் கட்டப்பட்ட இரும்புக் கோட்டைப் பிரதிகளிற்குள் ஒளிந்திருக்கும் போலி இலக்கியத்தையும் அவர் நுட்பமாக அவிழ்த்துக்காட்டுகிறார். அந்தளவில் அவரது இலக்கிய அழகியல் குறித்த கட்டுரைகள் தன்னிகரற்றவை என்கிறேன். ஆரம்பகால எழுத்தாளர்களிற்கு மட்டுமல்ல, அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களிற்கும் அவரது வழிகாட்டல் அவசியமானது. இந்த விடயத்தில் ஜெயமோகனை எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று சொல்லக் கூட நான் தயங்கப் போவதில்லை.
ஓர் அழகியல் கலையில் தேர்ச்சி பெற்றவர் அதை ஆழமாக உணர்ந்தவர் கண்டிப்பாக சமூக, அரசியல் பார்வைகளிலும் பிழைபடாமலிருப்பார் என்றில்லை. கிட்டத்தட்ட ஜெயமோகனின் எல்லாவித சமூகவியல், அரசியல் எடுத்துரைப்புகளையும் நான் நிராகரிக்கக் கூடியவனாகவேயிருக்கிறேன். குறிப்பாக பெரியார் ஈவெரா குறித்து அவர் சொல்லும் வார்த்தைகள் எதிர் விவாதத்திற்குக் கூடத் தகுதியற்றவை.
'ஜே.ஜே:சில குறிப்புகள்' படித்திருக்கிறீர்கள்தானே. அதைப் படிக்கும் போது வாய்விட்டுச் சிரித்தவாறே ரசித்துப் படித்தவர்களை நான் அறிவேன். குறிப்பாக நாவலில் வரும் தனித் தமிழ்ப் பற்றாளன், ஜே.ஜேயை சே. சே எனத்தான் அச்சிடுவேன் என நிபந்தனை போட்டபோது வெடித்துச் சிரித்தவர்களுண்டு. ஆனால் நான் அந்த நூல் முழுவதையும் வயிறு பற்றி எரியவே வாசித்து முடித்தேன். அதேபோல பி.ஏ. கிருஷ்ணனின் 'புலிநகக்கொன்றை'யைப் படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுக்குச் சரியான பெயர்: கொலைவெறி. ஒவ்வொரு தன்னிலைகளும் ஒரே பிரதியை வெவ்வேறு விதமாக வாசிக்கவும் உணரவும் முடியும். தன்னிலை என்பது சமூகத்தின் ஏற்றத்தாழ்வான - அநீதியான விதிகளால், அந்த விதிகளால் இயக்கப்படும் தனிமனித இருப்பால் உருவாக்கப்படுவது. அங்கேயிருக்கிறது அசோகமித்திரனை மட்டுமல்ல கே. டானியலையும் பிடிப்பதற்கும் பிடிக்காமல் விடுவதற்குமான சூக்குமம்.
(வல்லினம் இணையத்தில் 2011-ல் சில மாதங்கள் வாசகர்களின் கேள்விகளிற்குப் பதிலளித்தேன். அவற்றிலொன்று இது).
Post Top Ad
Wednesday, 25 July 2018
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment