எட்டேகால் லட்சணமே!
ஷோபா சக்தி
தமிழ் சினிமாவில் எனக்குத் தெரிய முதல் பாலியல் நிந்தனைச் சொல் (கெட்ட வார்த்தை) 'கிழக்குச் சீமையிலே' படத்தில்தான். நெப்போலியனும் விஜயகுமாரும் 'வக்காளி' என மாறி மாறிப் பிளந்துகட்டுவார்கள். இதற்கு முன்னாக தேவர் மகனில் கௌதமி F..என ஆரம்பித்து நிறுத்திவிடுவார்.
தமிழ் நவீன இலக்கியத்தில் 'ஃ பக்கர்' என எழுதி ஜெயகாந்தனும் ஜி. நாகராஜனும் ஏடு தொடக்கிவைத்தது எனக்கு நல்ல ஞாபகம். ஆனால் எந்தக் கதைகளில் என்பது மறந்துபோய்விட்டது. சுத்தமான தமிழில் பாலியல் சொல்லை முதலில் இலக்கியத்தில் அச்சேற்றிய பெருமை பெருமாள் முருகனைச் சேரும். அது 'ஏறுவெயில்' முதற்பதிப்பு. இரண்டாவது பதிப்பில் அது காணாமற்போனது.
சினிமாவில் - இலக்கியத்தில் எல்லாம் இத்தகைய வார்த்தைகள் இடம்பெறுவது வாழ்வின் எதார்த்தமே. அவற்றையெல்லாம் சுய தணிக்கையோ அரச தணிக்கையோ செய்வது கூடாது என நான் கூட 'கெட்ட சினிமா எடுக்கலாம்' என்றொரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரை சென்னை லயொலா கல்லூரி நடத்திய கருத்தரங்கில் அரங்கேற்றப்பட்டு இப்போது என் வலைப்பதிவிலும் கிடக்கிறது.
இங்கேதான் ஒரு பொயின்டை கவனிக்க வேண்டுகிறேன். வாழ்வியலின் எதார்த்தத்தையும் பாத்திரங்களின் மன அமைப்புகளையும் குறித்துக்காட்ட இச் சொற்களைக் கலையில் பயன்படுத்துவதில் தயக்கம் கூடாது எனத்தான் நான் சொன்னேனே தவிர கட்டுரைகளிலும் முகப்புத்தகத்திலும் பூனாச் சூனா என ஏசச் சொல்லவில்லை. இப்படி ஏசுவதில் ஏதோ பெரிய புரட்சி கிடக்கிறது என்றால் பொலிஸ்காரர்கள்தான் உலக மகா புரட்சியாளர்கள். அடுத்தது இயக்கக்காரர். துாஷணம் கொட்டுவதில் இந்த இரண்டு தரப்பையும் அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்பது எனது நேரடி அனுபவம்.
பாலியல் நிந்தனைச் சொல்லைப் புனைவுக்கு வெளியே எழுத்தில் முதல் பாவித்த புண்ணியவான் சாருநிவேதிதா என நினைக்கிறேன். அதைத் தொடர்ந்து அள்ளுகொள்ளையாக அவருக்கு வாரிசுகள். அடப் பாவிகளே, அந்த மனுசன் எழுதியதுபோல ஒரு கதையையாவது உங்களால் எழுத முடிகிறதா? பூனாச் சூனாவைப் ஃபலோ பண்ண வாசிப்பே வேண்டியதில்லையே. அதற்கு ஒரு பேசும் கிளி போதுமே.
தமிழில் முதலில் தோன்றிய வார்த்தை ஒரு பாலியல் துாஷணச் சொல்லாக இருப்பதற்குக் கூட வாய்ப்புண்டு. ஆனால் இந்தக் காலத்தில் ஒருநபர் நேரடியாக இந்தச் சொற்களைப் பேசுவது ஒழுக்கவாதக் கேள்விகளிற்கு அப்பாற்பட்டு அறம் சார்ந்து சரியானதுதானா?
கெட்டவார்த்தைகளைக் கவனித்துப்பாருங்கள். அவற்றில் தொண்ணுாற்றொன்பது விழுக்காடு வார்த்தைகள் பெண்களையும் திருநங்கைகளையும் இழிவுபடுத்தும் சொற்களாகவே இருக்கும். அதேவேளையில் சில பாலியல் உறுப்புகளை இழிவெனக் கருதும் புனிதம் X அசுத்தம் என்ற எதிர்முரணும் மனித உடலில் கட்டமைக்கப்படுகிறது. 'துாமை' என்பது திட்டுவதற்கான சொல்லல்ல. அது கொண்டாடப்பட வேண்டியது. துாமையைத் தீட்டாக - அசுத்தமாகக் கருதித் திட்டுவது ஒட்டுமொத்தப் பெண் பிறப்பையே திட்டுவதற்குச் சமமல்லவா.
பாலியல் நிந்தனைச் சொற்களிற்குள் உறைந்திருப்பது ஆணாதிக்க மனநிலை மட்டுமல்லாமல் இந்தப் பாலியல் நிந்தனை மொழியே ஆணாதிக்கத்தால் கட்டப்பட்டதல்லவா. இந்தச் சொற்களை உபயோகிக்கும் ஒவ்வொருவரது மனக் கட்டமைப்பு மட்டுமல்ல அதற்குள் உறைந்திருக்கும் நுண் அதிகாரக் கூறுகள் குறித்தும் நாம் யோசிக்க வேண்டாமா?
கெட்ட வார்த்தை பேசுவது கிராமத்து மனிதர்களின் அல்லது விளிம்புநிலை மக்களின் தனித்துவப் பண்பு என்று யாரும் வக்காலத்தோடு என்னிடம் வரக் கூடாது. அமெரிக்காக்காரன் எந்த கிராமத்துக்காரன் என நான் திருப்பிக் கேட்பேன். சிம்பு பாடிய 'பீப்' விளிம்புநிலைப் பாடலா எனவும் கேட்பேன். எங்கள் காலத்தில் ஒரு அய்யர் இயக்கத்திலிருந்தார். 'பூனா ஐயா' என்பது அவரது பட்டப்பெயர். அவர் புளியங்கூடலைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் சத்தியமாக அந்தப் பெயர் அவருக்கு வரவில்லை. மந்திரம் மாதிரியே விரைந்து துாஷணம் சொல்லக்கூடிய தோழரவர்.
தமிழ் செம்மொழி. வசைபாடுவதற்கு அதில் எவ்வளவோ அழகான சொற்கள் வற்றாமலுண்டு. வசைத் திலகம் காளமேகம் நம் முப்பாட்டனவல்லவா. எட்டேகால் லட்சணமே என்ற அவ்வை நம் முப்பாட்டியல்லவா. இத்தகைய முதுசொம்களை நம் மொழியில் வைத்துக்கொண்டும் நீங்கள் பெண்களையும் திருநங்கைகளையும் ஓரினக் காதலர்களையும் இழிவுபடுத்தும் வகையில் உறுப்புகளையும் கலவி நுணுக்கங்ளையும் கொண்டு ஏசி சக மனிதரை இழிவுபடுத்துவது உங்களையே இழிவு படுத்துவதைப் போன்றது!
Post Top Ad
Wednesday, 25 July 2018
எட்டேகால் லட்சணமே! - ஷோபா சக்தி
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment