கனமழை பேசும் காத்திர மொழி...! பாஸ்கர் எம் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday 25 July 2018

கனமழை பேசும் காத்திர மொழி...! பாஸ்கர் எம்

கனமழை பேசும் காத்திர மொழி...!
பாஸ்கர் எம்

சில வாரங்களுக்கு முன்பாக நெருங்கிய உறவினர் வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. அங்கிருந்த சின்னக் பிள்ளைகளிடம் விளையாடிக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பையன், காந்தத்துண்டினைக் கையில் வைத்து கிடைத்த இரும்புப்பொருட்களை எல்லாம் ஒட்டி ஒட்டி விளையாடிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் என் நினைவுகள் பின்னோக்கி ஓடியது.

என் பள்ளிப்பருவத்தில் சக மாணவர்கள் யாரேனும் ஒருவனிடம் காந்தத் துண்டு கிடைத்துவிட்டால், அவன் செய்யும் சேட்டைகள் தாங்கவே முடியாது. அந்த காந்தத்தை மண்ணில் போட்டுப் புரட்டி எடுத்து, அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் இரும்புக் குவியல்களை ஒன்றாக ஒரு காகிதத்தின் மேல் பகுதியில் வைத்துவிட்டு அக்காகிதத்தின் கீழ்மட்டத்தில் காந்தத்துண்டினை வைத்து, மேலிருக்கும் இரும்புத் துகள்களை நாட்டியம் ஆடச்செய்வதுண்டு. பொழுதுபோக்குச் சாதனங்கள் பூதாகாரமாக நம் வீடுகளின் உட்புகாத காலகட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிவுப்பூர்வமான கிராமத்து விளையாட்டுகள் வழிநெடுகிலும் காணக்கிடைக்கும்.

இந்த சம்பவத்தை உறவினர் வீட்டுச் சிறு பிள்ளையிடம் சொன்னேன். "அப்படியா? எங்கே அதுபோல் செய்து காட்டுங்கள் பார்ப்போம்" என்றான் ஆர்வமாக. நானும் செய்து பார்க்கலாமென்று வீட்டுக்கு வெளியில் வந்தபோதுதான் ஒரு சமகால உண்மை சம்மட்டியாலடித்தது. காந்தத் துண்டுகளை விட்டுத் துழாவ இப்போதெல்லாம் எங்கே மண் இருக்கிறது? வீட்டுக்கு வெளியே கண் முன்னே தெரிவதெல்லாம் கான்க்ரீட் காடுகள், சிமெண்ட் மற்றும் தார்ச்சாலைகள். வீட்டுக்கு உள்ளே சொல்லவே வேண்டியதில்லை, இரண்டடி மண் தரை இருந்தாலும் அதனை சிமெண்ட் தரையாக மாற்றிவிடுவதில் தான் எத்தனை ஆனந்தம் நமக்கு..!  நிலைமை இவ்வாறு இருக்க, மழைநீர் நிலத்துக்கடியில் எவ்வாறு எவ்வழியாக உட்புகும்? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும்  மனதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தேன். என் மனக்கேள்விக்கு செயல்வடிவம் கொடுப்பது போல், சென்ற வாரம் முதல் துவங்கி துவம்சம் செய்துகொண்டிருக்கிறது வடமேற்குப் பருவமழை எனும் மாமழை.

இதே மழை கடந்த வருடம் பொய்த்துப்போனபோது,  மழை ஏமாற்றிவிட்டதாக யாரைப்பார்த்தாலும் சொல்லிக்கொண்டிருந்ததை மறந்திருக்கமாட்டோம். மின் தட்டுப்பாடு, குடிநீர்த் தட்டுப்பாடு, காலாகாலத்தில் அணைகள் திறக்கப்படாதது என் எல்லாவற்றுக்கும் அதையே காரணம் காட்டப்பட்டதை அறிவோம். அப்படிப்பட்ட இன்றியமையாத வாழ்வாதாரமான மழை இப்போது கொட்டித் தீர்க்கும்போது ஏன் கூப்பாடு போடுகிறோம்?

இப்போதெல்லாம் மழை பருவம் தவறாமல் பொழிவதில்லை, அப்படி வந்தாலும் அத்தனை பேரின் வாழ்நிலையையும் ஆட்டிப்படைத்துவிட்டுச் சென்றுவிடுகிறது. எல்லா அறிவியல் தொழில் நுட்பத்தையும் அரைமணி நேரத்தில் வாய்பிளக்கவைக்கும் வல்லமை பொருந்தையதாக பொழிந்துத் தள்ளிவிடுகிறது இப்போதைய மழைக்காலங்கள். இதற்கான ஆதாரங்களை அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்கவேண்டியதில்லை. சென்ற வருடத்துக்கு முந்தைய வருடம்.. அதாவது 2015-ம் ஆண்டு இறுதியில், சென்னை மற்றும் கடலூரில் பேய்மழையின் பிடியில் இறுகிப்போனோம். நாமும், அரசும் என்னென்ன தவறுகள் செய்தோம், என்னென்ன சரியாதவையைச் செய்யாமல் விட்டோம் என்கிற கட்டாய உண்மைகளைக் கண் முன்னே கண்டோம். மழைவிடும்வரை காத்திருந்து, பின்னர் அது ஓர்  'கெட்ட'  கனவென மறந்து சட்டென பழைய 'நல்ல' வாழ்க்கைக்கு மாறினோம். ஆகாயத் தாமரை தொடங்கி, அத்தனை ஆக்கிரமிப்புக்கும் அரசே காரணம் என ஆட்காட்டிவிரலுக்கு அதிக வேலைகொடுத்து அலுத்துப்போனோம். மற்றபடி ஆக்கிரமிப்புகளிலும், அடங்காத வெள்ள நீர் வடியாமல் போவதிலும் நம் பங்கு எதுவுமே இல்லை என்று வெள்ளந்தியாக நகர்ந்து போனோம்.

நம் வீட்டுக்கும், அடுத்தவீட்டுக்கும் இடையில் சாக்கடை நீர் சமயத்தில் ஸ்தம்பித்து நிற்பதைப் பார்த்திருப்போம். சிறு பிளாஸ்டிக் பை ஒன்று நேராக ஓடவேண்டிய கழிவுநீரை மடைமாற்றம் செய்துகொண்டிருக்கும். அதனை ஒரு குச்சியால் நீக்கிவிட்டு கழிவுநீர்க்குவியலைச் சரி செய்துவிட்டு கடமையாற்றக்கிளம்பி விடுவோம். மறந்தும் கூட பிளாஸ்டிக் பொருட்களால் உண்டாகும் அபாயத்தை அறியமாட்டோம், அறிந்திருந்தும் அதனை ஒதுக்க மனதளவில் நிலைக்கவும் மாட்டோம்.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இதே நொடியில் எத்தனை டன் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாகிக்கொண்டிருக்கும்? எத்தனை டன் பிளாஸ்டிக் பொருட்கள் நுகர்வோர் தம் வீட்டுக்குத் தேவையான பொருட்களை அடைத்து, வியாபாரிகளால் வழங்கப்படும் என்பதை நினைத்தால் தலை சுற்றுகிறது.... கூடவே தலைகுனிவையும் தருகிறது. டிபன் பாக்ஸ் எடுத்துச்சென்று கறி வாங்கிவந்த காலமும், பனை ஓலைப்பையில் மீன் வாங்கிவந்த காலமும் எப்படி மாறியது? அந்த மாற்றத்தின் மூலமாக நாம் அடைந்திட்ட ஆகச்சிறந்த பலன் என்ன? Use & Throw கலாச்சாரத்தின் மீது நமக்கேன் அப்படியொரு அற்பமான மயக்கம்? பேனாவுக்கு இங்க் போட்டதெல்லாம் மாறி இப்போது கேட்ரிஜ் பேனாவை பிள்ளைகளுக்கு வாங்கித்தருகிறோம். குடங்களை எல்லாம் பரண்மீதோ பழைய விளைக்கோ போட்டுவிட்டு பிளாஸ்டிக் டிஸ்பென்ஸரில் தண்ணீர் பிடிக்கிறோம் அதுவும் விலைக்கு வாங்கிய தண்ணீர். "அட இது கூடவா பிளாஸ்டிக்ல வருது..?" என அங்கலாய்த்தும் அதிசயித்தும் கெட்டுப்போவோம். எத்தனை வேகமாக மாற முடியுமோ அத்தனை வேகமெடுப்போம், விவேகமின்றி. இருப்பதை விரைவாகத் தவற விட்டு அல்லது தொலைய விட்டு, இல்லாததை இருட்டில் தேடுவது தான் நாகரீகம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். மலைகளை உடைத்து பாதையில் போட்டு, வயல்வெளிகளையும், சமவெளிகளையும் மலைமேடாக மாற்றி, அக்கறைப் பதிவுகளை அவசரமாக ஷேர் செய்துவிட்டு ஆற்று மணலை திருட்டு லோடாக இருந்தாலும் வாங்கி வீட்டை எழுப்பி…இவ்வாறாக நாம் எல்லா விதத்திலும் மாறிக்கொண்டே இருப்போம், ஆனால் இயற்கை மட்டும் மாறவே மாறாமல் அது தன் வேலையைச் சரிவரச் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது எத்தனை அபத்தமான, ஆபத்தான பேராசை...?

வராதா..!  என ஏங்கவைத்து, பின்னர் ஏன் வந்தது? எப்போது போகும் எனக்கேட்க வைக்கும் விதத்தில்தான் இன்றைய மழைகள் விஸ்வரூபம் எடுக்கிறது. மக்களை எப்பவும் சூடாகவே வைத்திருக்கத் துடிக்கும் காட்சி ஊடகங்கள் வேறு தன் பங்கிற்கு நுட்பமாக அணுகவேண்டிய நேரலையை நொறுக்கி விளையாடி வருகிறது. அமைதியான உண்மையை விடவும் பரபரப்பான பொய்யே மேல் என்பது போல் சிந்திப்பது ஊடக ஓட்டப்பந்தயத்தில் நியாயமாகச் சித்தரிக்கப்படுவது நல்லதற்கில்லை.

ஒரு காலத்தில் ஒரு மாதம் முழுக்கப் பெய்யவேண்டிய மழை, இப்போதெல்லாம் ஓர் இரவில் கொட்டித் தீர்த்துவிடுகிறது என்றால், முன்பைவிடவும் அதிக அளவில் நாம் பொறுப்புடன் இருக்கவேண்டும், போதிய நீர் நிலைகளை அமைத்துப் பராமரித்திட வேண்டும் என்பது தான் பொருள். நிதர்சன நிலை அதுவாக இல்லை. ஆளுக்கு ஒருவரை குறை சொல்லிவிட்டு அடுத்த வேலைக்குத் தாவவேண்டிய அவசரமான ஒரு வாழ்க்கை நமதாகிப்போயிற்று. இவையாவும் நம் தரப்பு நியாயம் தவறும் உண்மைக்கூற்றுகள் என்றால், அரசுத் தரப்பில் ஆற்றப்படும் அசகாய (!) பணிகள் எப்படி இருக்கிறது என்பதை சின்ன விவாதத்தில் சுருக்கிச் சொல்லமுடியாத இழிநிலையில்தானே நிலவுகிறது. சட்டென மாறும் வானிலை, பட்டென அறையும் போக்கைக் கையில் எடுத்துவிட்டதை இன்னும் எவ்வளவு காலத்துக்கு அறிந்தும் அறியாமல் நடிக்கப்போகுது நம் அரதப்பழைய கொள்கைகளைக் கையாளும் அரசுகள்? தாம்பரத்தில் ஒரு குழந்தை பேருந்தின் துவாரம் வழியே தவறி விழுந்து இறந்துபோனால், அதனைத் தொடர்ந்து பள்ளிப்பேருந்தின் நடை மேடையில் கவனம் செலுத்துவார்கள். கும்பகோணத்தில் தீ விபத்தில் பள்ளிக்குழந்தைகள் கருகினால், அதன்பின்னர் பள்ளிகள் யாவும் தீப்பிடிக்காத கூரையும், அவசர வெளியேற்ற வாயில்களையும் அமைத்திட வலியுறுத்துவர். மின் கம்பி அறுத்து இரண்டுபேராவது செத்தால் மட்டுமே அது குறித்து தடுப்புச் சட்டங்கள் கொண்டுவருவார்கள். இப்படித்தான் இருக்கிறது  நம்மை ஆள, நம்மால் உருவாக்கப்பட்ட அரசு நிர்வாகம். காலப்போக்கில், பூமியில் நிகழும் அசாதாரண மாற்றங்களின் அடிப்படையில், நமது நீர்த்தேவைக்காக கருணையோடு  உருமாறிக்கொட்டும் கனமழையின் காத்திர மொழியின் போக்குப் புரிந்தும், பொருள் அறிந்தும் அதற்கேற்ப செயல்திட்டங்களையும், மழைக்கெதிரான மாற்று வியூகங்கள் வகுக்கப்படும்வரையிலும்....

ரிப்பன் கட்டிடத்தில் மழைக்கென ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு அறைகளும் மூழ்கவே செய்யும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages