திருக்குறள் எளிய வடிவில், அதே அளவு சொற்களில் அதே அளவு எழுத்துக்களில்.... (காலி பூசா சிறையில் எடுத்த எழுத்து முயற்சி)
சிறையில் சிந்தனைகள் அதிகம் பிறக்கும். சிலர்க்கோ தனிமையால் இதயம் இறக்கும் இலங்கையினுடைய தென்பகுதி காலி மாவட்ட பூசா சிறையில் இருக்கையில் பூத்த முயற்சி இது. திருக்குறளை அதேயளவு சொற்களில்(ஏழு சொற்கள்) அதேயளவு எழுத்துக்களில் எளிய நடையில் வழங்க எண்ணம் உதித்தது. கடின பணி. ஒரு குறளில் இடம்பெறும் எழுத்துக்களை எண்ண வேண்டும். குறளினை சீர்பட பொருளுணர வேண்டும். பின்னர் அதேயளவு எழுத்துக்களின் தொகை வருமாறு எளிய நடைக்கு மாற்ற வேண்டும். சிறையில் நேரத்திற்கா பஞ்சம். குறட் சுனையில் இறங்கினோம். பல்பக்க பொருள் தேடினோம். பொருளுரைகள் கொண்ட சில நூல்களை அருகிற் கொண்டோமாயினும், பரிமேலழகர் உரையே முந்திய உரையாதலால், அதனை முன்னிறுத்தி எளிய நடைக்கு மாற்றல் செய்யும் பணியில் இறங்கினோம்.
இதோ திருக்குறளின் தன்மை கெடாதபடி நாம் உருவாக்கிய 'எளிய குறள்மொழி'. இவற்றில் சிலவற்றை பதிகிறோம்.
01.கடவுள் வாழ்த்து
01
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
மொத்த எழுத்துகள் 26
எழுத்திலே அகரமே முதலாம்: இந்த
உலகில் இறை முதலாம்
02.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
எழுத்துகள் 30
கல்வியினாற் பயனேது களங்கமிலா இறைவன்
காலடியை தொழாது விடில்
அதிகாரம் 02(வான் சிறப்பு)
02
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை
எழுத்துகள் 33
உண்போர்க்கு உணவாக்கி உண்போர்க்கு உணவாகி உண்போர்க் குதவும் மழையே
03
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி
எழுத்துகள் 33
ஆழிசூழ் பூமியாகிலும் அருமழை காலம்தவறின்
வாடிடும் பசியினால் உயிர்
06
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
எழுத்துகள் 32
விண்மழை வீழாவிடில் சின்னஞ்சிறு புல்லதுவும்
மண்தனிற் தலை காட்டாதே
03. நீத்தார் பெருமை
06
செயற்கரிய செய்வார் பெரியர்: சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
எழுத்துகள் 30
முடியா செயலதுவும் முடிப்பார் பெரியோர்
முடிக்க இயலார் சிறியார்
09
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
எழுத்துகள் 29
ஒருநொடி எனினும் தடுத்திடல் ஆகாதே
பெருநெறி பெரியார் சினத்தை
04.அறன் வலியுறுத்தல்
02
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை: அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
எழுத்துகள் 32
அறம் புரிதற்போல் வேறுநன்றில்லை: அதை
மனம் விடுதற்போல் கேடுமில்லை
06. வாழ்க்கைத் துணைநலம்
03
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
எழுத்துகள் 30
நிறைகுண மனைவி மனையில் இல்லாததேது
குறை குணமெனில் இருப்பதேது
இவை சில மாதிரிகளே. எடுக்கப்பட்ட அதிகாரங்கள் முழுமையாக எழுதப்பட்டுள்ளன. இவை தகுதிமிக்கோரிடம் ஒப்புநோக்கலுக்காக ஒப்புவிக்கப்படும். ஆர்வ முயற்சி அவ்வளவுதான்.
யோ.புரட்சிwww.gafslr.com
Post Top Ad
Wednesday, 25 July 2018
புதிய கோணத்தில் திருக்குறள் - யோ.புரட்சி
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment