எந்தவொரு தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொள்ளாத சாகித்ய மண்டல விருது - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

எந்தவொரு தமிழ் எழுத்தாளர்கள் கலந்துகொள்ளாத சாகித்ய மண்டல விருது

எஸ்.அல்.அம் ஹனீபா
.
1992ம் ஆண்டு வெளிவந்த எனது மக்கத்துச்சால்வை தொகுதிக்கு 1995ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சாகித்ய மண்டல விருது கிடைத்தது. எனது தொகுதியுடன் சேர்த்து எனது மதிப்பு மிகு நண்பர் யாழ்ப்பானத்தைச் சேர்ந்த க. சட்டநாதன் அவர்களின் “உலா” சிறுகதைத் தொகுதிக்கும் கிடைத்தது. அந்த ஆண்டில்தான் இரண்டு சிறுகதைத் தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் விருது வழங்கி கௌரவித்தார்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மேடையில் எனக்கான விருதையும் காசோலைக்கான கடித உறையையும் வழங்கினார். அவரிடம் பெற்றுக் கொண்டு நான்கு எட்டுக்கள் வைத்திருப்பேன் எனது கண்களில் க. சட்டநாதன் என்று பொறிக்கப்பட்ட முகவரி மின்னியது. உடனே மீண்டும் ஜனாதிபதியை நோக்கிச் சென்றேன். அவர் ஆங்கில மொழியில்

“என்ன நடந்தது என்று கேட்டார்?”

“இந்த காசோலை எனது யாழ்ப்பாண நண்பருக்கானது.”

அவர் சிரித்துக் கொண்டு உதவியாளர்களைப் பார்த்து செயலாளரைக் கூப்பிடுங்கள் என்றவர் என்னைப் பார்த்து,

“எங்கிருந்து வருகிறீர்கள்?”

“மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியிலிருந்து வருகிறேன். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கையிலும் நூற்றுக்கு தொன்னுத்தாறு வீதம் உங்களுக்கு வாக்குபோட்ட கல்குடா தொகுதி“

என்று சொன்னேன். அவருக்கு இல்லையென்ற மகிழ்ச்சி. நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போது செயலாளர் பிரசன்னமானார். செயலாளரைப் பார்த்த ஜனாதிபதி,

“என்னால் கூட யாழ்ப்பாணம் செல்ல முடியாது. இவரால் போக முடியுமா? இவருக்குரிய காசோலையைக் கொடுங்கள்"என்றார். இரண்டு நிமிடங்களில் எனக்குரிய காசோலை எனது கைகளுக்கு வந்தது.

பார்வையாளர் அரங்கில் மர்ஹூம் எம்.எச்.எம். ஸம்ஸ் மற்றும் திக்குவலை கமால், கவிஞர் ஜவாத் மரைக்கார், எனது மனைவி மக்கள் எல்லோரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நானும் போய் அவர்களோடு கதிரையில் அமர்ந்த போது மீண்டும் செயலாளர் என்னைத் தேடிவந்தார்

“ஜனாதிபதியிடம் ஏன் சொன்னீர்கள்? என்னிடம் சொல்லியிருக்கலாம் தானே” என்றார்.

“இப்பொழுது இரவு 7.30 மணி. நான் உங்களை எங்கு தேடுவேன்? எனக்கு செயலாளரைத் தெரியாதே. யாழ்ப்பாணத்திற்குப் போய் அந்த காசோலையை மாற்றி வரவும் முடியாதே” என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டு இன்றிரவு விருது பெற்ற அனைவருக்கும்தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இரவு விருந்து, குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள் என்றார். அதையும் நான் மறுத்தேன். முப்பதிற்கு மேற்பட்ட காவல் நிலையங்களில் ஏறி இறங்கி இந்த பண்டார நாயக்கா சர்வதேச மண்டபத்தை நான் அடைய பட்டபாடு கொஞ்சம் நஞ்சமில்லை. இந்த இரவு வேளையில் இங்கிருந்து தாஜ் சமுத்திரா ஹோட்டலிற்கு வருவது இலகுவானதுமல்ல,நீங்கள் விருதுக்கான அழைப்போடு இந்த விருந்துக்கான அழைப்பையும் அனுப்பியிருந்தால் மிக்க மகிழ்ச்சியோடு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இரவு விருந்தில் கலந்திருப்பேன்.

எங்களைப் போன்ற எழுத்தாளர்கள் ஒரு ஜனாதிபதியுடன், அதுவும் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இரவு விருந்தில் குடும்பத்துடன் கலந்து கொள்வது என்பது எவ்வளவு பெரிய பேறு என்றேன். அந்த சந்தர்ப்பமும் நழுவிப்போனதில் கவலையே என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றேன். 

அந்த விருந்தில் எந்தவொரு தமிழ் எழுத்தாளரும் கலந்து கொள்ளவில்லை என்பது கவலையே...

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages