முஸ்லிம் அரசியலில் ஒரு முழுமையான சுய விமர்சனம் தேவை!
மீள்பிரசுரம்
சிராஜ் மஷ்ஹூர்
முஸ்லிம் அரசியலின் குழப்பமான பக்கங்கள் குறித்த விடயங்களே, நமது அன்றாட உரையாடல்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. மு.கா. வின் பேராளர் மாநாட்டுக்கு முன்னரும் பின்னரும் நடந்தேறிய மற்றும் நடந்து கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வுகள், பல்வேறு வகையான எதிர்வினைகளை உண்டாக்கி வரும் இந்த சூழ்நிலையில், மிக முக்கியமான விடயங்கள் குறித்து எமது கவனத்தைத் திருப்ப வேண்டியுள்ளது.
மு.கா. வெறுமனே ஒரு அரசியல் கட்சி என்ற மனப்பதிவிலிருந்து மட்டும் இதை அணுக முடியாது. அது ஒரு மக்கள் இயக்கமாகவே தன் பணிகளைத் தொடங்கியது. தொடக்க கால மு.கா.வில் அரசியல் கட்சியையும் தாண்டிய கவனத்திற்குரிய பல பண்புகள் காணப்பட்டன. அதிலும் குறிப்பாக, மிகப் பயங்கரமான நாட்களில் மக்களின் குரலாக அது விளங்கியது. ஒரு விடுதலைக் குரலின் பிம்பத்தை அது சுமந்திருந்தது.
நிஜத்தில் அது அப்படித்தான் இருந்ததா என்பது விவாதத்திற்குரிய விடயம். இந்த சிறப்பம்சம் காரணமாக மு.கா. மீது உணர்வு நிலைப்பட்ட ஈடுபாட்டை மக்கள் காட்டினர். ஒரு வகையில் புலிகள் மீது தமிழ் மக்களுக்கிருந்த உணர்ச்சிகரமான ஈடுபாட்டினை ஒத்த ஒரு மனநிலையை, கிழக்கிலும் வடக்கிலும் இருந்த முஸ்லிம் மக்கள் மு.கா. மீது காட்டினர். இந்த உணர்வு நிலை தென்னிலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும் ஓரளவு பரவியிருந்தது.
ஆனால், நம்ப முடியாத வேகத்தில் இந்தப் பண்பை அக்கட்சி இழக்கத் தொடங்கியது. தனித்துவமான, வித்தியாசமான அரசியல் கட்சி என்ற பார்வையிலிருந்து வெளியேறி, ஒரு மாமூலான அரசியல் கட்சி என்ற நிலைக்கு அது தரம் தாழ்ந்தது. அக்கட்சி பற்றிய பெருங் கனவுகளைச் சுமந்திருந்த முக்கியஸ்தர்கள் எல்லோருமே இந்த வீழ்ச்சிக்கு அறிந்தோ அறியாமலோ பங்களித்துள்ளனர். இன்று இவர்களில் பலருக்கு வெள்ளையடிக்க முயற்சி செய்யப்படுகிறது. ஆனால், பகிரங்க வெளியில் வராத பல திரைமறைவு 'டீல்கள்' இதற்கு நிலையான சான்றுகளாக உள்ளன. அவை ஒரு காலத்தில் வெளிவரும் என்று நம்பலாம். ஆனால், கசப்பான உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற பலவீனமான மனிதர்களின் மனக்குகைகளில் இதுவும் புதைக்கப்பட்டு விடலாம். அப்படியான ஒரு நிலையில் எதுவும் வெளிவராமலும் போய் விடலாம். யார் கண்டது?
இந்த 'டீல்' கலாச்சாரத்தின் பிதாமகர்கள் வெளி ஆட்கள் அல்ல. அதன் ஸ்தாபக முக்கியஸ்தர்களே இந்த சீரழிவைத் தொடக்கி வைத்தவர்கள். ஆனால், இந்த உண்மைகளை பலர் வெளிப்படையாக ஒத்துக் கொள்வதில்லை; அல்லது ஒத்துக் கொள்ள விரும்புவதில்லை. விமர்சன நியாயங்களை விட, புனிதப்படுத்தலில் ஆர்வம் கொண்டோர் மிகைத்த ஒரு சூழ்நிலையின் விளைவு இது. முதற் கோணல் முற்றிலும் கோணல் என்பதன் சூட்சுமமே இது. 'பிறக்கும்போதே முடம். இனிப் பேய்க்குப் பார்த்து என்ன பலன்?' என்ற ஊர்ப் பழமொழியின் அர்த்தம் விளங்கியவர்கள் இதனை அதிகம் உணர்ந்து கொள்வர்.
முஸ்லிம் அரசியலின் கொள்கை, கோட்பாடுகள், இயங்கு தளம், அது கடந்து வந்த பாதை குறித்து தீர்க்கமான ஒரு மறுபரிசீலனை மிகவும் அவசியம். முழுமையான ஒரு சுய விமர்சனமின்றி இந்த நெருக்கடியும் பின்னடைவும் சூழ்ந்திருக்கும் நாட்களைக் கடக்க முடியாது. ஆனால், உணர்ச்சிக் கொந்தளிப்பில் பார்வையைப் பறிகொடுத்து நிற்போரால் இதனைப் புரிந்து கொள்ள முடியாது. நிதானமும் தெளிவும் தீர்க்க தரிசனமும் ஒருங்கே கைகூடி நிற்கும் ஒரு தரிசனத்தை, பார்வைப் புலத்தை நாம் கண்டடைய வேண்டும். கடந்த காலத்தின் நல்ல அம்சங்கள் குறித்தும் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும். திரும்பிப் பார்க்கத் தெரியாத, அதற்குத் தயாரில்லாத சமூகம், வரலாற்றில் ஒருபோதும் முன்னோக்கி நகர முடியாது.
முஸ்லிம் அரசியல் மையம் கொண்டிருக்க வேண்டிய அடிப்படை அம்சமே நீதி என்பதாகும். இன மைய சிந்தனையை விட, நீதி குறித்த ஆழ்ந்த சிந்தனைகளே நம்மை வழி நடத்தியிருக்க வேண்டும். குர்ஆன் , ஹதீஸ் என்று பேசுவதன் உண்மையான அர்த்தம் இதுவேயாகும். நீதிதான் ஒரு முஸ்லிமை வழி நடத்தும் உன்னதமான அறம் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதிலிருந்து நழுவுவது என்பது இஸ்லாத்தையே கொச்சைப்படுத்துவதாக அமையும். இது குறித்து முஸ்லிம் சமூகம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
நீதி பற்றிய இந்தப் பார்வைக் கோளாறு, இனப்பற்று என்ற சிந்தனைக்கும் அப்பால் இன்னொரு படி மேலே சென்று, இனவாதத்தின் பிடிக்குள் பலரையும் மூழ்கடித்து விடும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது. மேலெழுந்தவாரியான பார்வைக்கு இது மிகவும் எளிமையான விடயம் போலத் தோன்றினாலும், நடைமுறையில் இதன் எதிர்விளைவுகள் மிகவும் சிக்கலானவை; பாரதூரமானவை. முஸ்லிம் அரசியலின் பண்பு மாற்ற வீழ்ச்சி நிலையில் இந்த நோய்க்கூறு மிக முக்கியமாக அடையாளம் காணப்பட வேண்டும்.
இந்த அரசியலை முன்னெடுத்து வந்த 'கீழ் மத்திய தர வர்க்க மனநிலை' குறித்தும் ஆழ்ந்து ஆராய வேண்டியுள்ளது. குறிப்பாக 70 களுக்குப் பின்னர், முன்னாள் கல்வியமைச்சர் பதியுதீன் மஹ்மூத் முக்கிய பங்களித்த 'புதிய படித்த சமூகத் தொகுதியினரின்' உருவாக்கம், அவர்களது மன அமைப்பு குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. 80 களுக்குப் பின்னர் தோன்றிய திறந்த பொருளாதாரக் கட்டமைப்பின் பின் விளைவுகளும் இதில் நிச்சயமான தாக்கத்தைச் செலுத்தியுள்ளதை அவதானிக்கலாம். நவதாராளவாத பொருளாதார சூழலும், இங்கு உருவாகி வளர்ந்த ஊழல் மலிந்த சந்தர்ப்பவாத அரசியல் கலாச்சாரமும் முஸ்லிம் அரசியலை நச்சூட்டியிருப்பதை மறுப்பதற்கில்லை.
இலங்கைக்கேயுரிய 'தேர்தல் அரசியல் கலாச்சாரத்தின்' ஓட்டைகளை நன்கு கற்றுத் தேர்ந்த இந்த இழிநிலை, முற்றிலும் எதிரிடையான மலினத்துவ அரசியல் பண்புகளை பொதுத் தளத்தில் விதைத்திருப்பது மிகப் பெரும் அவலமே. முஸ்லிம் அரசியல் இலங்கையின் பன்மைத்துவ சமூக இயங்கியலில் வரவேற்கப்படுவதற்குப் பதிலாக, அருவருப்புக்கும் முகச்சுளிப்புக்கும் உரிய ஒன்றாக மாறி விட்டது இதனால்தான்.
இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் இதே போன்ற 'குப்பை அரசியலையே' இந்த நாட்டுக்கு வழங்கியிருக்கின்றன. அதன் இன்னொரு நீட்சியாகவே இந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் அடையாளம் காண முடியும். தமிழ் கட்சிகளும் இதற்கு விதி விலக்கல்ல. இலங்கையின் இடதுசாரி அரசியல் கூட இப்படிக் கறை படிந்த ஒன்றாகவே உள்ளது. பாராளுமன்ற இடதுசாரிகள் பலர் நம்ப முடியாத பலவீனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆக, முஸ்லிம் அரசியலின் சீரழிவை, இலங்கை அரசியலின் இந்த ஒட்டுமொத்தச் சீரழிவின் கறை படிந்த ஒரு பகுதி எனக் கருதவும் முடியும். எல்லோருமாய்ச் சேர்ந்து அழகிய இலங்கை தேசத்தைச் சிதைத்து சீரழித்து விட்டனர். இதனையே இந்த நாட்டின் முற்போக்கு சக்திகளும் அறிவுஜீவிகளும் அதிகம் விமர்சித்து வருகின்றனர். அந்த விமர்சனங்கள் இந்நாட்டுப் பிரஜைகளின் மனச்சாட்சியைப் பிரதிபலிப்பதாக அமைந்திருப்பது மிகவும் முக்கியமான, வெளிப்படை உண்மையாகும்.
இலங்கை முஸ்லிம் சமூகம் 'தனிமைப்படும் அரசியலைச்' செய்வதோ அல்லது 'தனிமைப்படுத்தும் அரசியலைச்' செய்வதோ விவேகமானதல்ல. இணைப்புப் பாலமாக செயற்பட வேண்டிய கடப்பாடும் வரலாற்றுக்கு கடமையும் முஸ்லிம் மக்களுக்கு உள்ளது. ஆழமாகப் பிளவுபட்டிருக்கும் இலங்கைச் சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் வளர்க்கும் பொறுப்பைச் சுமக்க வேண்டிய நிலையில் முஸ்லிம் சமூகம் உள்ளது. பாதிப்புக்குள்ளான மனநிலையிலிருந்து வெளியேறி, 'ஸ்மார்ட்' ஆன ஒரு சிறுபான்மைச் சமூகமாக (Smart Minority) முஸ்லிம் சமூகம் தள மாற்றம் பெற வேண்டும். அதையே முஸ்லிம்களின் அரசியலும் பிரதிபலிக்க வேண்டும்.
நேர்மையும் சுய கௌரவமும் ஜனநாயகமும் பன்மைத்துவமும் மிளிரும் ஒரு மூன்றாவது அணி, முன்னெப்போதை விடவும் மிகவும் இன்றியமையாத தேவையாக மாறியுள்ளது. அழகிய இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்த மூன்றாவது அணி அதிகம் பங்களிக்க முடியும். மூன்றாவது அணி என்பது சகல இனங்களையும் பிரதிபலிக்கும், முற்றிலும் புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்றின் அடிப்படையிலேயே முகிழ்த்தெழ வேண்டும். அதுதான் புதிய இலங்கையை சாத்தியப்படுத்தும். அதற்கு முஸ்லிம் அரசியல் முன் கையெடுக்க வேண்டும்; துடிப்புடன் பங்களிக்க வேண்டும். இதை நோக்கிய பண்பு மாற்றத்தை முஸ்லிம் அரசியல் எடுத்தாக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
Post Top Ad
Wednesday, 25 July 2018
முஸ்லிம் அரசியலில் ஒரு முழுமையான சுய விமர்சனம் தேவை! - சிராஜ் மஷ்ஹீர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment