நீதிபதிகளின் பதவி உயர்வு தொடர்பான விடயங்களை முன் வைப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவரையும் சந்திக்கச் செல்வது பொருத்தமானதல்ல என்று ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்தார்.
நீதிபதிகளுக்கு பதவி உயர்வு பெற்றுக்கொடுத்தல் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையான திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஹலதாரி ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற நீதிச்சேவை சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
திறமைகளை கவனத்திற்கொண்டு குறித்த பதவி உயர்வு மேற்கொள்ளப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய முறைமைகளை முன் வைக்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு தெரிவித்த ஜனாதிபதி, இது இத்துறையில் உள்ள அனைவருக்கும் நாட்டில் உள்ள கல்விமான்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைமையாக இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படும்போது பக்கச்சார்பற்ற முறையிலும் சுயாதீனமாகவும் அப்பணியை நிறைவேற்ற தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பிரச்சினைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபரிடம் கேட்டறிவதுடன், நீதிச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
நீதிபதிகளின் பதவி உயர்வுடன் தொடர்புடைய பெயர்களை பரிந்துரை செய்யும்போது எவரேனும் ஒருவருக்கு அப்பதவி உயர்வு வழங்கப்படக் கூடாதென்பதற்கு காரணமாக அமையும் விடயங்கள் இருக்குமானால் அதனை குறித்த பெயரை பரிந்துரை செய்வதற்கு முன்னர் தமக்கு எழுத்து மூலம் அறியத்தருமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதுடன், அதன் மூலம் ஏற்பட இருக்கும் பிரச்சினைகளை குறைக்க முடியமென்றும் குறிப்பிட்டார்.
நீதிபதிகளின் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுமதிப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து மீண்டும் ஒருமுறை கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி பிரச்சினைகள் ஏற்படாத வகையில் முறைமையொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நீதிபதிகளின் சம்பள முறைமை தொடர்பாக நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சினைகள் தொடர்பாக குறித்த தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர் திருப்தியான முடிவுக்கு வரக்கூடியதாக இருந்தமை தொடர்பில் ஜனாதிபதி இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.
நீதித்துறை செயற்பாட்டுக்கு மொழி தடையாக இருக்கக்கூடாதென்பதுடன், நீதித்துறையில் மட்டுமன்றி ஏனைய அனைத்து அரச சேவை நிறுவனங்களிலும் மொழி அறிவை மேம்படுத்துவதற்கு தற்போது துரித நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் எதிர்வரும் மூன்று வருடங்களில் அப்பிரச்சினையை குறைக்க முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வழக்குகள் தாமதமாவது குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, முன்னேற்றமான முறைமைகளை பின்பற்றி அவற்றின் குறைபாடுகளை சரி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று தெரிவித்தார். உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசியல் அழுத்தங்களின்றியும் அரசியல் பிரமுகர்களின் தலையீடுகள் இன்றியும் நீதிபதிகளுக்கும் நீதித்துறையில் உள்ள அனைவருக்கும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு தேவையான பின்புலம் அமைத்துக்கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அண்மையில் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் வெளிநாட்டு நீதிபதிகளின்றி எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடிய திறமையான நீதிபதிகள் எமது நாட்டில் உள்ளனர் என்பதை தாம் சர்வதேசத்திடம் கூறியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அந்த வகையில் குறித்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர எமக்கு முடியுமென்பதுடன் அது நாட்டின் சுயாதீனம் தொடர்பாக பெற்றுக்கொண்ட வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நீதிச்சேவை சங்கத்தின் வருடாந்த மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு மலர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைச்சர் தலதா அத்துகோரல, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதிச்சேவை சங்கத்தின் தலைவர் ரங்க திசாநாயக்க, நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் பிரதீப் ஜயதிலக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.




No comments:
Post a Comment