ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளதாகவும் அது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தலின் பின் னர் பாரிய மாற்றங்களை மக்கள் உணர முடியும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.
ஊழல் குற்றவாளிகள் இல்லாத நபர்களை தயங்காது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையுமாறும் அவர் குறிப்பிட்டார்.
களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். இப்போதே நாம் பாரிய வெற்றியை பெற்றுள்ளோம். குறிப்பாக வேட்பு மனுத் தாக்கலின் போதே எமக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் தாக்கல் செய்த எந்தவொரு வேட்பு மனுவும் இலங்கையின் எந்த பகுதியிலும் நிராகரிக்கப்படவில்லை. ஏனைய அனைத்து கட்சிகளின் வேட்புமனுக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் நாங்கள் பொறுப்புடன் எமது கடமைகளை சரியாக செய்து வருகின்றோம். அதுவே எமக்கு வெற்றியாக மாறி வருகின்றது.
மேலும் ஒருபுறம் ஐக்கிய தேசியக் கட்சி பலமடைந்து வரும் நிலையில் ஏனைய பிரதான கட்சிகள் துண்டுகளாக சிதறி வருகின்றன. பொதுஜன முன்னணி தனித்து களமிறங்கும் என அறிவிக்கப்பட்ட பின்னர் அவர்களின் உறுப்பினர்கள் படிப்படியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை நாடிச் செல்கின்றனர். அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மேலும் சிலர் எம்முடன் இணைந்துகொள்ளவும் தீர்மானம் எடுத்து வருகின்றனர். எனினும் சரியான நேரம் பார்த்து எம்முடன் இணைந்து கொள்ளவே நாம் அவர்களுக்கு தெரிவித்துள்ளோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எந்த நேரத்திலும் இணைந்துகொள்ள முடியும். எனினும் எம்முடன் இணையும் போது சரியான நேரம் பார்த்து வரவேண்டும். அதேபோல் பொதுஜன முன்னணியில் உள்ள ஊழல், மோசடிகள் இல்லாத நபர்களை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக உள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கு ஏற்ற நபர்களை நாம் ஏற்றுக் கொள்வோம். அவ்வாறான முக்கியமான சிலர் எம்முடன் இணைய தயாராக உள்ளனர்.
முக்கியமான சில நபர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்கள் நிச்சயமாக எம்முடன் இணைந்து கொள்வார்கள். அதேபோல் மேலும் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையின் கீழ் இணைந்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்தனர். ஆகவே விரையில் தாமரை மொட்டு கருகி அழிந்துபோகப் போகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் அவரது குடும்ப அரசியல் வாதி களும் என்ன செய்யப் போகின்றனர் என்பதை நாம் வேடிக்கை பார்க்கத்தான் போகின்றோம். கடந்த கால ஊழல் அரசில் தலைமை வகித்த அனைவரையும் மக்கள் நிராகரித்த நிலையில் இவர்கள் முழுமையாக அரசியலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப் பிட்டார்.
No comments:
Post a Comment