அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மத்தள விமானநிலையத்தை திறந்துவைக்க அரசாங்கம் தீவிர நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது. எல்ல உள்ளிட்ட பகுதிகளின் சுற்றுலாத்துறையினை மேலும் அபிவிருத்தி செய்ய ஜனவரி முதல் இருவாரத்திற்குள் பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவும் சுற்றுலாத்துறை அமைச்சிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தென்னிலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தெற்கில் வர்த்தக வலயங்களை ஆரம்பிக்கவும் துறைமுக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவும் அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருகின்றது.
சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அம்பாந்தோட்டை துறைமுக வேலைத்திட்டங்கள் மற்றும் வர்த்தக வலயங்களை ஆரம்பிக்கும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்தள விமான நிலையத்தினை அபிவிருத்தி செய்து அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் திறந்து வைக்க சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் மத்தள விமானநிலைய அபிவிருத்தி குறித்து கடந்த காலங்களில் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் உறுதியான தீர்மானம் எதையும் எடுக்க முடியவில்லை என அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் தற்போது பேச்சுவார்த்தைகள் வெற்றி கண்டுள்ளதாகவும் விமான நிலைய அபிவிருத்தி குறித்து விரைவில் இந்திய அரசாங்கத்துடன் உடன்படிக்கைகளை இறுதிப்படுத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்தள விமானநிலைய அபிவிருத்தியை அடுத்து பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளின் சுற்றுலாத்துறை வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் ஆகவே எல்ல சுற்றுலா பிரதேசம், நீர்வீழ்ச்சி மற்றும் ஏனைய பகுதிகளின் சுற்றுலா துறையினை பலப்படுத்த எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என பிரதமர் சுற்றுலாத்துறை அமைச்சிடம் வினவியுள்ளதுடன் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இரு வாரங்களில் இது குறித்த அறிக்கை ஒன்றை தமக்கு வழங்குமாறும் பிரதமர் சுற்றுலாத்துறை அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment