வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற தொழிற்சங்கங்கள் மறுப்பு பஸ் ஸ்டிரைக் 5ம் நாளாக நீடிப்பு: பணிக்கு திரும்ப முதல்வர் வேண்டுகோள் - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday 8 January 2018

வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற தொழிற்சங்கங்கள் மறுப்பு பஸ் ஸ்டிரைக் 5ம் நாளாக நீடிப்பு: பணிக்கு திரும்ப முதல்வர் வேண்டுகோள்

Related image

சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் நடத்தும் பஸ் ஸ்டிரைக் இன்று 5வது நாளாக நீடிக்கிறது. போராட்டத்தை வாபஸ் பெற தொழிற்சங்கங்கள் மீண்டும் மறுத்து விட்டன.  மக்கள் நலன் கருதி ஊழியர்கள் பணிக்கு திரும்ப முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள், நீதிமன்ற தடை உத்தரவை மீறி நேற்று 4வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் நேற்றும் 70 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. அதாவது, மொத்தம் உள்ள 22,500 பஸ்களில் சுமார் 15,000 பஸ்கள் 4வது நாளாக ஓடவில்லை. இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். பஸ் ஸ்டிரைக்கால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4 நாட்களாக அரசு பஸ்கள் இயங்காததால் மக்கள் கடுமையான துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். ழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்க அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. பதிலுக்கு தொழிற்சங்கங்களும் தங்கள் கோரிக்கைகளில் உறுதியாக உள்ளனர். நிச்சயம் 2.57 மடங்கு ஊதிய உயர்வு வேண்டும், நிலுவை தொகை 7,000 கோடியை விடுவிக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தனியார் பள்ளி, கல்லூரி டிரைவர்கள், கனரக லாரி ஓட்டுனர்கள், வேன் ஓட்டுனர்களை வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பல மாவட்டங்களில் நேற்றும் 30 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 

இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சட்டத்தை மீறி தற்காலிக டிரைவர்களை பயன்படுத்துவதாக அரசு மீது அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் தற்காலிக டிரைவர்களால் பல இடங்களில் விபத்து ஏற்பட்டு வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தற்காலிக டிரைவர் ஓட்டிய பஸ் வயலில் இறங்கியது. அதேபோல், தலைநகர் சென்னை ஆவடியில் நேற்று முன்தினம் தற்காலிக ஓட்டுனரால் மாநகர பஸ் ஒன்று சுவரில் உரசி விபத்து ஏற்பட்டது. சென்னை சாந்தோமில் நேற்று மாநகர பஸ் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் தற்காலிக பணியாளர் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, போதிய அனுபவம்
இல்லாத டிரைவர்களால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தன. ஆனால், அரசு அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தற்காலிக டிரைவர்களை பணியமர்த்தி வருவதால் உயிர்ப்பலி அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் தற்காலிக டிரைவர்களால் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஆனால், கோரிக்கைகள் நிறைவேறும் வரை எத்தனை நாளாக இருந்தாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று தொழிற்சஙகங்கள் நேற்று மீண்டும் உறுதியாக அறிவித்துவிட்டன. மேலும், நீதிமன்ற தடை உத்தரவு குறித்து நீதிமன்றத்தில் இன்று முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இன்று 5வது நாளாக பஸ் ஸ்டிரைக் நீடிக்கிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை. இதனால் ஸ்டிரைக்கால் நேற்று பெரிய அளவு பாதிப்பு இல்லை. ஆனால், இன்று வாரத்தின் முதல் வேலைநாள் என்பதால், மாணவர்கள், அலுவலகம் செல்வோர், தொழிலாளர்கள், சிறு, குறு வியாபாரிகள், தினக்கூலி பணியாளர்கள் என லட்சக்கணக்காேனார் அரசு பஸ்களில் பயணம் செய்வார்கள். 

ஆனால், இன்றும் பஸ்கள் இயங்காததால் பல்வேறு தரப்பு மக்கள் 5வது நாளாக கடும் அவதி அடையும் சூழல் உருவாகியுள்ளது. ஆரம்பத்திலேயே பேசி தீர்த்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் அரசு அலட்சியமாக செயல்பட்டதால் தான் தங்களுக்கு இந்த கதி நேரிட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். ஒருபுறம், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த போக்குவரத்து தொழிலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு அமைப்புகள் ஆதரவுடன் போக்குவரத்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 

சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 20 சங்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். 57 சதவீத பஸ் ஓடுவதாக அரசு தகவல்: ஊழியர்கள்  வேலை நிறுத்தத்தால் 70 சதவீதம் பஸ்கள் நேற்றும் இயங்கவில்லை. ஆனால் அரசு  தரப்பில் நேற்று முன்தினம் 59 சதவீதமும் நேற்று 57 சதவீதம் பஸ்களும்  இயக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் தொழிற்சங்கங்கள் அதை மறுத்துள்ளன.

எம்டிசியில் 230 தற்காலிக டிரைவர்கள்: வேலை  நிறுத்தம் காரணமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கடந்த 4 நாட்களாக  கனரக ஓட்டுனர் வைத்துள்ளவர்களுக்கு அழைப்பு கொடுத்தது. அதன்படி, கடந்த 4  நாட்களில் 230 தற்காலிக டிரைவர்கள் மற்றும் 113 கண்டக்டர்கள் பணியில்  அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாளை பொங்கல் முன்பதிவு கவுன்ட்டர் திறக்கப்படுமா?
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் பஸ் ஸ்டிரைக்கால் பயணிகள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர். அரசு பிரச்னையை தீர்க்காமல் பிடிவாதமாக உள்ளதால் பொங்கல் வரை ஸ்டிரைக் நீடிக்கும் நிலை உள்ளது. எனவே, பொங்கலுக்கு அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தபடி சென்னையில் சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு கவுன்ட்டர் நாளை திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

70 கோடி வருவாய் இழப்பு
அரசு பஸ்கள் தொடர்ந்து நேற்று 4வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்துக் கழகங்களுக்கு வருவாய் பெரிதும் இழப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, நாள் ஒன்றுக்கு ரூ.25 கோடி வருமானம் கிடைக்கும். ஆனால், 70 முதல் 80 சதவீத பஸ்கள் ஓடாததால் வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. இயக்கப்படும் பஸ்களிலும் அனுபவமுள்ள கண்டக்டர்கள் இல்லாததால் அவர்களால் சரிவர டிக்கெட் வழங்க முடியவில்லை. மக்கள் அரசு மீது அதிருப்தி அடைவார்கள் என்பதற்காக, வருமானம் வராவிட்டாலும் கூட பெயரளவுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 4 நாட்களில் சுமார் ரூ.70 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages