கயத்தாறு:
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 12 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். ரெயில் மூலம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னை வந்த அவர்கள் தமிழகத்தின் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மதுரை வந்தனர்.
பின்னர் கன்னியாகுமரிக்கு செல்வதற்காக அக்குழுவினர் ஒரு தனியார் டிராவல்ஸ் வேனில் நேற்று நள்ளிரவில் மதுரையில் இருந்து புறப்பட்டனர். அந்த வேனை மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த முத்துகாமாட்சி என்பவர் ஓட்டி வந்தார்.
அவர்கள் வந்த வேன் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தளவாய்புரம் நாற்கர சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வேன் நிலை தடுமாறி அங்குள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் வேன் பாலத்தில் இருந்து கீழே பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் இருந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த மற்றவர்கள் மரண ஓலம் எழுப்பினர்.
இதனை பார்த்த அவ்வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பலியான 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாருடன் டோல் கேட்டில் பணிபுரியும் ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் வேன் டிரைவர் முத்துகாமாட்சி மற்றும் முகேஷ் என்ற சிறுவன் மட்டும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். விபத்தில் பலியானவர்கள் பெயர் விபரம் வருமாறு:-
ரேகா (வயது 60), விந்தியா, ரமேஷ்குமார்(53), கனையலால்(62), டீகாம் (53), லால்சந்த்.
இந்த விபத்தில் படுகாயமடைந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ரூட்ஸி (55), சந்திரா (42), சுனிதா (35), சரளா (50), சோனம் (49) ஆகிய 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment