குறத்தியின் காதலன் - விமல் குழந்தை வேலு - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 27 July 2018

குறத்தியின் காதலன் - விமல் குழந்தை வேலு

.                 குறத்தியின் காதலன்
======================================.

இந்த பதிவில் மட்டும் நான் நபர்களின் பெயர்களை குறிப்பிடாமல் விடுகிறேன்.
=====================================

லண்டன் வந்து இருபது வருடங்களுக்கு பின்பு ஊருக்கு போயிருந்தபோதில் கண்ணில் பட்ட சில இளைஞர்கள் என்னை ஆச்சரிய படுத்தினார்கள் . பார்த்த பார்வைக்கு என்னோடு படித்த , பழகிய பழைய நண்பர்கள் போலவே இருந்தார்கள் சிலர். எப்படி இது...? நான் மட்டும் வயதுபோனவனாக இருக்க இவனுகள் மட்டும் உருவம் மாறாமல் இருக்கிறார்களே என சந்தேகிக்கும் அளவுக்கு  தந்தையின் உருவ அமைப்பிலேயே இருந்தார்கள் என் பழைய நண்பர்களின் மகன்கள். திடீரென பார்ப்பதில் எனக்கு மட்டுமே அப்படி தொன்றியிருக்கலாம்.

======================================

அப்போது நாங்கள் நால்வரும் சினேகிதர்கள்.நான் மட்டும் A/ L முடித்த வயதுக்காரன் மற்றய மூவரும் வேலை செய்துகொண்டிருந்த என்னை விட மூன்று நான்கு வயது மூத்தவர்கள். 

நால்வருக்குள்ளும் எக்ஸ் என்பவன் மிகவும் வித்தியாசமான , சற்று ஏடாகூடமான பேர் வழி . தான் சொல்வதே சரியென்பான் ,  எங்கள் கருத்துகளுக்கு எதிர் கருத்தே பேசுவான்... அதோடு கொஞ்சம் பொறாமைகாரன் மட்டுமல்ல பொம்புள விசயத்திலும் எங்களுக்கு முற்னோடியாகவே இருப்பான்.  எப்போதுமே வெள்ளை சாறன் வெள்ளை சேர்ட்தான் .  சிவலையன் .அழகாகவும் இருப்பான் . தினமும் பின்னேரம் சந்தையில் சந்தித்து நள்ளிரவோ .. அதிகாலைவரையோ எழுவட்டுவான் மைதானத்துக்குள் பேசிக்கொண்டிருப்போம். நாங்கள் மூவரும் அவனை பற்றி எங்களுக்குள் விமர்சித்து கொண்டாலும் கூட அவனில்லாமல் எங்கள் சந்திப்பு இருந்ததேயில்ல. நகைச்சுவையாக பேசுவான் . அந்த நகைச்சுவை மற்றவர்கள் மனதை தாக்குவது பற்றி அவனுக்கு கவலையே இல்லை .

பின்னேரம் நான்கிலிருந்து நள்ளிரவு வரை சந்தை திருவிழா கோலமாகவே இருக்கும் .

இப்பத்தைய இளைஞர்கள் சந்தைக்கு வருவதையோ , சந்தையில் கூடி நின்று பேசுவதையோ கெளரவ பிரச்சினையாகவே பார்க்ககிறார்கள். அப்போது அப்படியில்லை. எந்த தொடர்பு சாதனங்களும் அற்ற காலத்தில் நண்பர்கள் சந்தையில சந்திப்பதை தவிர வேறு வழியேயில்லை. 

மாலை நேரத்து கப்பல் லாம்பு கடைகளுக்கு இடவால் வெட்டி வெட்டி சைக்கிள் ஓடி நண்பர்களை தேடிய காலமது.. எங்களின் பொற்காலம்..

 காலை சந்தைக்கு அழிக்கம்மை குறவர்கள்  நாயுடன் வந்து கடை கடையாக ஏறி இறங்கி புகையிலை காம்பு சேகரிப்பார்கள் சந்தைக்கு வரும் குறத்திகளில்  குஞ்சரக்காவே பேரழகியென்று நான் முன்பே கதையும் எழுதியிருக்கிறேன். 

உச்சிகொண்டை, வெற்றிலைசாறில் ஊறி சிவந்த உதடுகள்  ,  கொடுத்துவைத்த பாசிமணிமாலைகள் புரளும் நீள் கழுத்து , அவளின் மூக்கில் இருப்பதற்கே தவம் செய்தது போன்ற மூக்குத்தி , வியர்வையில் மிதக்கும் புடரி முடிகள் ....  நவீன உடைப்போட்டிக்கு குறத்தி வேஷமிட்ட ஐஸ்வர்யாராய் போலிருந்த குஞ்சரக்காவை சந்தையில் ஒருதரமேனும் பார்க்காத கண்களே இருந்திருக்காது.

நாங்களும் கூட  அடிக்கடி குஞ்சரக்கா பற்றி பேசும்போதெல்லாம் நம்ம எக்ஸ் மட்டும் குஞ்ரக்காவுக்கு கூடவே வரும் அவளின் தங்கையே அழகென்பான். ஒரு நாளைக்கெண்டாலும் அவள அணைக்கவேணும் மச்சான் என்பான் .நாங்கள் சிரிப்போம்.

அழிக்கம்மை குறவர்கள் இரண்டாம் காட்சி படம் பார்ப்பதற்கு பின்னேரம் ஆறுமணிக் கேவந்து சந்தையில் நடமாட தொடங்கிவிடுவார்கள் . குஞ்சரக்காவின் தங்கையை சைற் அடிக்க எக்ஸும் சந்தைக்குள் வெட்டி வெட்டி சைக்கிள் ஓடியிருக்கிறான்.

1980 களில் பிரேமதாசாவின் பத்து வீட்டு திட்டம் வந்த காலம் அது . ஒவ்வொரு தொகுதியிலும் கட்டி முடித்த வீடுகளை கையளிக்கும் வைபவங்கள் வெகு கோலாகலமாக நடத்தப்பட்டது .

 அழிக்கம்மை குறவர்களுக்கும் பத்து வீடு கட்டப்பட்டது . அதை கையளிக்க பிரேமதாசாவே வந்தார் . அழிக்கம்மையில் பிரமாண்ட மேடைபோட்டு மாபெரும் விழாவாகவே நடந்தது .

கொழும்பிலிருந்தே கலைஞர்கள் வந்து நிகழ்ச்சி நடாத்தினார்கள் .கூடவே B H அப்துல் ஹமீதும் அறிவிப்பாளராக வந்திருந்தார். 

அக்கரைப்பற்றிலிருந்து பத்து மைல்களுக்கப்பாலிருந்த அழிக்கம்மை வயல்கிராமத்துக்கு எல்லா ஊர்களிலிருந்தும் சனம் படையெடுத்தாற்போல ஒதுங்க அழிக்கம்பையே திருவிழா கோலம் கண்டது. 

நாங்களும் போனோம் . அப்போதெல்லாம் ஊருக்குள் நாலைந்து பேரிடம்தான் மோட்டபைக்கே இருக்கும். நாங்கள் நால்வரும் இரண்டு சைக்கிள்களில் போயிருந்தோம். 

கொழும்பிலிருந்து வந்திருந்த சாஹிறாபானு என்பவர் பன்னிரண்டு உடைகளை உடுத்தி ஒவ்வொன்றாக களைந்து ஆடிய அந்த நடனத்தை போலவொரு நடனத்தை இலங்கையில் இதுவரை வேறு யாரும் ஆடி நான் கண்டதில்லை .very professional dance அது.

நிற்பதற்கு இடமில்லாத சனம் . மழைவேறுபெய்து வயல் நிலம் சதுப்பாகிற்று.   விழா பதினொருமணிக்கு முடிந்தது.  ட்றக்டர்களிலும்., வேன்களிலும் சனம் போய்க்கொண்டிருக்க  நாங்களும் போகவென்று பார்த்தால் எக்ஸை காணவில்லை ... ஒரு சைக்கிள் வேறு அவனிடம்  அவன் வந்தால்தான் மூவரும் வீடு போகமுடியும். 

எல்லா சனமும் போக இப்போது நாங்கள் மட்டும் மைதானத்துக்குள். பிரேமதாசா, ஹமீத் . கலைஞர்கள் வாகனங்களும் போய்விட்டது. கொழும்புக்காரர் மேடையை பிரித்து லொறியில் ஏற்றுகிறார்கள்.

சரி... கூழாவடி கடை வரை  மூவரும் நடக்கின்றோம். கடையடியடிக்கு வந்த நேரம்தான் எக்ஸ் பின்னால் வந்து சேருகிறான்.
எங்க போயிருந்தாய் என கேட்டபோது பதிலில்லாமல் சிரித்தான் .அவன் சிரிக்கும் போதில் அழகாயிருப்பான். சேர்ட் கசங்கியிருந்தது. ஆங்காங்கே புல் நுனிகளும் சேர்ட்டில் . கலவியில் கலைந்த கேசம் ஆண்களுக்கு அழகென ஒரு கவிதை படித்த நினைவுண்டு.அன்றைய கலைந்த கேசத்தில் அவன் அழகாகவே இருந்தான்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு லண்டனிலிருந்து  ஊருக்கு போனபோதில். பழைய நண்பர்கள் பலரையும் சந்தித்தேன்.  எக்ஸ் ஐ மட்டும் சந்தித்திக்கவே முடியல. 
அவன் எங்க போனானெண்டு தெரியாது விமல். கல்யாணம் செய்தான் . மகன் புறந்ததோட அவன் ஊர விட்டே போயிற்றான். போனவன் போனவன்தான்  ஊர்ப்பக்கமே வாறதில்ல .எங்க இருக்கானெண்டே தெரியாது .
அதே பழைய நண்பர்களும் என்னைப்போல்தான் அவனை பார்க்க ஆசையாக இருந்தார்கள்.

அடுத்த வருடமும் ஊருக்கு போயிருத்தேன். சந்தையில ஆட்டோகார நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போதுதான்  ஒருகடைக்குள்ளிலிருந்து வெளிய வந்த அந்த வாலிபனை கண்டேன்.

அச்சு அசலாக எக்ஸ் ஐயே ஒட்டிஉரித்திருந்த அந்த உருவத்தை கண்டதும் இவன் அவனின் மகனாகத்தான் இருக்கும் ,இவனிடம் கேட்டால் சிலவேளை தகப்பனை பற்றிய தகவல் கிடைக்ககூடுமென நினைத்து ஆட்டோ நண்பனிடம் அந்த பையன் எக்ஸ்ஸின் மகன்தானேடா என கேட்டபோது ஆட்டோகார நண்பன் சொன்னான்.

#இல்லையண்ணா இவன் அழிக்கம்மை. குறபொடியன்#

#நினைவடைசல்#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages