அஸீசும் மூன்று கைகளும் . - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday 27 July 2018

அஸீசும் மூன்று கைகளும் .

அஸீசும் மூன்று கைகளும் . 

========================

அச்சொட்டாக "தீ " படத்துல வாற சுமனைப் பார்ப்பது போலவே இருப்பார் .
நன்றாக கவனித்திருந்தவர்களுக்கு தெரியும் அவரின் கைகள் சற்று நீளமானவை என்பது. 
நண்பர்களுடன் நடந்து வந்தால் ஒரு ராஜ குமாரன் பவனி வருவது போலிருக்கும் அக் காட்சி.
ஆறடி உயரம் ,
அழகாய் பார்த்து வெட்டிய நேர்த்தியான மீசை ,கழுத்தில் புரளும் முடி ,
சிவந்த தேகம், 
முதலில் காணும் பலரில் சிலராவது அவரை மானசீகமாக காதலிக்க வில்லையென்று சொன்னால் நான் அதை நம்ப மாட்டேன். 

அப்போதெல்லாம் அஸீஸ்தான் எங்கள் ஊரின் காதல் கனவுக் கண்ணன் .
என்னை விட அய்ந்து வயது மூத்தவர்.
நாலைந்து நண்பர்கள் இல்லாமல் அஸீஸ் தனியாக வெளியில் திரிந்து நான் கண்டதில்லை.
பணக்காரன், சோக்காளி நண்பர்களுக்கு குறையேன் இருக்கும்.
நாகரீகமாகத்தான் உடுத்துவார் ,கொழும்பில்தான் உடுப்பெடுப்பார்.
கொழும்பில் என்னென்ன styles  அறிமுகமாகிறதோ அது அடுத்த நாளே அஸீஸ் உருவில் எங்கள் ஊருக்கு வந்து விடும். அதன் பின் அந்த style  கொப்பி பண்ணப்பட்டு கொஞ்ச நாட்களுக்கு ஊருக்குள் உலாத்தும். ஆனால் அஸீசுக்கு இணங்குவது போல் அந்த style  யாருக்கும் இணங்கியிராதென்பது வேறு விசயம்.
குஸ்பு இட்லி , நயன்தாரா வளையல் என்பது போல் எங்கள் ஊரில் அஸீஸ் style  என்று சொன்ன ஒரு காலமும் இருந்தது.ஆக எங்கள் ஊரின் உடை நாகரீகத்தின் மொஹஞ்சதாரோ, ஹரப்பா, சிந்து வெளி எல்லாமே அஸீஸ்தான்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சுபைதீன்...
அடங்க மாட்டான். ஆனால் நல்லவன். போடியாரின் மகன்களில் கடைசி தலை தெறியன். காக்கா உள்ளே போனபின் இரட்டுக்குள் போய் குந்தியிருந்து கந்தன் கருணை பார்ப்பதில் விண்ணன்.
இவனின் அன்பத்தொல்லைக்கு பயந்து இவனைக் கண்டாலே நான் ஒழிந்து ஓடுவதுமுண்டு.
எத்தனை பேர் மத்தியில் நின்றாலும் அத்தான் என்று பெரும் குரல் கொடுத்தே கூப்பிடுவான். 
வா ஒரு ரீ குடிப்பமென்பான். மறுத்தால்,
ப்பாஹ் எங்களுக்கிட்டயா உங்குட கணக்க காட்டுற சும்மா உட்டுக்கு வாங்கத்தான் . 
இறுக்கி கட்டிப்பிடித்து கிட்டத்தட்ட தூக்கி போய் ரீ வாங்கித் தந்தால்தான் அவனுக்கு நிம்மதி . 
இவனுக்குப் பின் இவனைப் போல ஸ்ரைலாக மோட்டபைக் ஓடி நான் யாரையும் கண்டதில்லை.
இவன் ஊருக்குள் மோட்டபைக் ஓடி வரும் போது இவனுக்கும் , றோட்டுக்கும் இடையில் நின்று அந்த பைக் நெழிந்து வளைந்து நர்த்தனமாடும் அழகே தனி. 
என்னை எதிர் திசையில் கண்டால் கூட எங்கத்தான் போகிறாய் என்று கேட்டு ஏற்றி சென்று விட்டு விட்டுத்தான் தான் போகும் திசை நோக்கி போவான். 
அப்போது சின்னப்பள்ளியடி பெற்றோல் செற்றுக்கு முன்னால் ஒரு தேநீர் கடை, கடைக்கு முன்னால் பார்த்தால் யாருமே இருக்கமாட்டார்கள்,வாடிக்கையாளர்கள் எல்லோருமே கடைக்கு பின்னால்தான்.
கட்லட்டும், இறைச்சி ரொட்டியும் அடுப்பிலிருந்து இறங்கும் முன்பே காலியாகிவிடும்.ஒன்றை தின்று விட்டு மற்றதுக்கு காத்திருப்போம் .அப்படியொரு ருசியும்,பிசியுமான கடை அது.அங்கு சுபைதீன் என்னை அடிக்கடி கூட்டிப் போவது. 
இவனுக்கு பணம் தண்ணியப் போல ,செலவு  . . செலவு செலவாளி .
இவனும் கூட நல்லாவே உடுப்பான்.அதுவும் அஸீஸின் அடுத்த வாரிசு மான்தான் என்பது போல்தான் உடுப்பான். 
அஸீஸ் கொண்டு வரும் ஸ்ரைலை அடுத்த நாளே கைப்பற்றி விடும் சுபைதீனுக்கு தான் தான் அஸீஸின் ஏகலைவன் என்கிற நினைப்பு வேறு.
சினிமா தியேட்டருக்குள் போனானென்றால் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியாமல் இருக்கும். 
எப்ப பார்த்தாலும் நண்பர்களுடன் சந்தோஷமாவே அவனின் பொழுது கழியும். 
வாழ்வை அனுபவிக்கப் பிறந்தவன் சுபைதீன்.

அம்பாரையில் கம் உதாவ கலைக் கண் காட்சியும் , களியாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது.
ஒரு மாத திரு விழா, 
ஒவ்வொரு நாள் இரவும் எல்ல ஊரிலிருந்தும் பொடியன்,பொட்டைகள் அள்ளுப் பட்டு போகுங்கள்.
அத்தனை நாட்களும் சுபைதீனுக்கு கொண்டாட்டம்தான்.
சிநேகிதங்களுடன் போவதும், பெட்டைகளுடன் சேட்டை விடுவதும் செலவழிப்பதும்,விடிந்தே வீடு வருவதுமென நகர்ந்த எங்களின் சந்தோஷ நாட்களின் சிலது அது.
ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சேர்ட் அதுவும் புதுசாகத்தான் போட்டு வருவான் சுபைதீன்.
கம் உதாவைக்கு போட்டு போவதற்கென்றே கொழும்பு போய் பற்றிக் துணிவாங்கி வந்து
அகலமான அரைக்கை வைத்து தைக்க சொல்லியிருந்தான் சுபைதீன்.

நேற்று வெட்டி வைத்து விட்டு போய் அடுத்த நாள் வந்து தைப்பதற்கென்று சுபைதீனின் துணியை விரித்து பார்த்த ரெயிலருக்கு பேரதிர்ச்சி.வெட்டி வைத்த துணித் துண்டுகளில் சுபைதீனின் ஒரு கை துண்டுத்துணி மிஸ்சிங்.
எவ்வளவு தேடியும் கிடைக்க வில்லை . கழிவு துண்டு துணிகளுடன் கூட்டி அள்ளுப்பட்டு சுபைதீனின் கையும் குப்பைக்குள் போய்விட்டது. 
என்ன செய்யுறதென்ற யோசனை ரெயிலருக்கு. கொழும்பிலிருந்து வாங்கி வந்த துணி , உள்ளூர் கடைகளிலும் தேடிப்பார்த்தார் மகிடைக்க வில்லை.
கம் உதாவைக்கு போக வெளிக்கிடும் அசரத்தில் வந்த சுபைதீனிடம் ரெயிலர் தூக்கிக் கொடுத்த சேர்ட்டை விரித்த சுபைதீன் இரண்டு கைகள் இல்லாமல் கோணிச் சாக்குக்கு கொலர் வைச்சாப்போல இருந்தத பார்த்ததும் என்ன ஓ .  த சேட்டு தைச்சீக்கைகயள் என்ன வெள்டாட்றயளா ரெயிலர் .   . . . கத்த தொடங்கி விட்டான்.
மெதுவாக பின் பக்கம் போன ரெயிலர் சுபைதீனை கூப்பிட்டு ரகசியமா சொல்வது போல் சொன்னார்.
"சுபைதீன் உனக்கொரு விசயம் தெரியுமா ? அஸீஸ் கொழும்புக்கு போய் கம் உதாவைக்கு போட்டுக்கு போறதுக்கெண்டு கொழும்பு இப்ப அதான் ஸ்ரைலாமெண்டுக்கு கை இல்லாத சேர்ட் ஒண்டு வாங்கி வந்திரிக்காராம எண்டு கேள்வி. ஓளா அவருக்கு மட்டும்தான் ஸ்ரைல் தெரியுறா ?
ரெயிலர் சொல்ல சொல்ல உச்சி குளிர்ந்திச்சி சுபைதீனுக்கு.
வாழ்வில் முதன் முதலில் குருவை மிஞ்சிய சிஷ்யனின் சந்தோஷத்தில் சேர்ட்டை வாங்கிக் கொண்டு போய் விட்டான். 

முகம்மட், வஹாப் , நியாஸ், நான் நால்வரும்தான் அன்றும போயிரந்தோம். பெளர்ணமி நாளுமென்பதால் அளவுக்கு அதிகமான கூட்டம்.
ஒவ்வொரு ஊர்களிலிருந்தும் வந்திருந்த பஸ்களுக்கும் அருகில் அந்தந்த ஊர் பெடியனுகளும் பெட்டைகளுமாக சேர்ந்து பாட்டுப் பாடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் நால்வரும் புதுனங்களையும் பொட்டைகளையும் பார்த்துக் கொண்டே நடந்து நம்மூர் பஸ் நிற்குமிடத்திற்கு வந்தால், A E மனோகரனின் சின்ன மாமியே ஓடிக்கொண்டிருந்தாள்.
டோலக்கும், சல்லாரிகளுடனும் நம்மூர் பொடியன்கள், நடுவில் நம்ம சுபைதீன் . . . 
ஒரு கையில் சிகரட்டும், மறு கையில் கிலு கிலுப்பையுடனும் , இரண்டு கையுமில்லா சேர்ட்டுடனும் ஆடிக்கொண்டிருந்த சுபைதீனின் கோலத்தை கண்டு நாங்கள் சிரித்த சிரிப்பை நினைத்தால் இன்றும் கூட வயிறு நோகும். 
எப்படியோ அந்த சன நெரிசலிலும் என்னை கண்டுற்றான் சுபைதீன். அத்தான் என்று கத்திக் கொண்டு வந்து என்னை இழுத்துக்கொண்டு போய் தன்னோடு ஆடச்சொல்லி வற்புறுத்துகிறான். 
நல்ல வேளை பக்கத்தில் ரீ கடை ஏதும் இருந்திருக்க வில்லை.
ஒன்று சொல்லியே ஆக வேண்டும். 
இரண்டு கைகளும் இல்லாத அவனின் சேர்ட் பார்ப்தற்கு கோமாளித்தனமாக இருந்தாலும் அவனின் ஸ்ரைலான நடன அசைவுகள் அதை மறைத்ததென்றே சொல்லலாம்.அந்தளவுக்கு அழகாக ஆடக்கூடியவன் சுபைதீன்.
இந்த நேரத்தில்தான் எங்கள் இடத்துக்கு நண்பர்கள் சகிதமாக வந்து சேர்ந்தார் அஸீஸ். 
அஸீஸை கண்ட சுபைதீன் கையில் இருந்த சிரட்டை எறிந்து விட்டு பவ்வியம் காட்டினான்.
அன்று மடித்து விடப்படாத முழுக்கை சேர்ட்டில் அஸீஸ் அழகாய் இருந்தார்.
சுபைதீனின் ஆட்த்தையே பார்த்துக்கொண்டிருந்த அஸீஸ் சுபைதீனை 
கண் ஜாடையால கூப்பிட ஓடிப் போய் என்ன அஸிகாக்கா என்றவனிடம் அஸீஸ் கேட்டார் 
" டேய் பண்டி என்னடா இது கோலம் . . . எங்கடா இந்த சேர்ட்ற ரெண்டு கையும் ?" 
துரோணரின் இழி சொல் கேட்ட நம்ம ஏகலைவன் சோகமாகிட்டார். நாங்கள் மட்டும் சிரிப்பதை நிறுத்தவேயில்லை.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஊருக்கு போயிருந்த போது ,
றஸ்மியின் வீட்டில் சாப்பாட்டை முடித்து விட்டு வரும் போது மகனுக்கு நப்பி வாங்க ஸம் ஸம் பாமஸிக்குள் நின்ற போது . அத்தான் என்ற குரலுக்கு திரும்பிப் பாரத்தால் , அதே அழகான மிதப்புப் பல் சிரிப்போடு சுபைதீன் . மீசையில் கொஞ்சம் நரை விழுந்திருந்தது.என்னைக்க கண்டதில் சந்தோஷம் தாளவில்லை அவனுக்கு.
கன நேரம் பேசியிருந்து விட்டு விடை பெறும் போதுதான் சொன்னான்.
"எங்க போக . . என்ன ரீ ஒண்டு குடிக்காமையா .  ஒங்கட கதையும் நீங்களும் உட்றவமா ஒங்கள .   சும்மா வாத்தான் .  . "
சுபைதீன் இன்னும் திருந்தேவயில்ல.

அடுத்த நாள் திருக்கோயில் தீர்த்த திருவிழாவுக்கு போயிருந்தேன்.
வீதியில் கடைகளை பார்க்க முப்பது வருடங்களுக்கு முன்னைய நினைவுகள் நெஞ்சில் முட்டியது.
ஒவ்வொரு கடைகளாக பார்த்து கடந்து கொண்டிருந்தேன். கடக்க முற்பட்ட கடை ஒன்றுக்குள் . . . . .  
ஒரு அலுமினிய பானைக்கு விலை சொல்லிக் கொண்டிருந்தார் அஸீஸ் . 
கலங்கி விட்டேன் நான். 
அஸீஸின் ஒற்றைக் கையில் ஒரு பானை .  மற்றக் "கை" 
அவ்விடமிருந்து இல்லாமலாகிவிட்டேன் அஸீஸ் என்னை காண்பதற்கு முன்பாய்.

 #மனவடைசல்#

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages