சிரிக்காதீர்கள் !!
சிரிக்கும் நேரமல்ல இது. நேற்று அவர்கள் சிரித்தார்களாம் இன்று நீங்கள் சிரிக்கின்றீர்களாம்.
உங்கள் இருவரின் சிரிப்புக்கிடையில் அழுவது நாங்கள்தான். ஆமாம்... நாங்கள்...??? நடுநிலை நல்லிணக்க நக்குண்ணி நாய்களென்று எங்களை என்னாவது சொல்லிவிட்டு போங்கள் ஆனால் சிரிக்கும் நேரமல்ல இது. சக மனிதன் மரணத்தில் மகிழ்வது மனிதமற்ற செயல் என்பதை இரு சாராருமே உணரவேண்டிய தருணமிது.
உங்களின் சிரிப்புக்கான காரணம் , அதற்கான நியாயம் எனக்கும் புரிகிறது. அதை அவர்களும் உணராமலில்லை. ஆனாலும் " இன்னார் செய்தாரை ஒறுத்தல் அவர் நாண..." ..படித்ததில்லையா ?
வேண்டாமே....
என்னிடமும் இருக்கிறது சிரிப்பின் பாக்கி .
ஆனால் நான் சிரிக்க முடியாது, சிரிக்கவும் மாட்டேன். இன்று நான் சிரித்து விட்டு நாளை என்னவென்று என் நண்பனின் முகம் பார்ப்பது ?
எனக்கு நண்பர்களுமில்லை , அவர்கள் எனது அயலவர்களுமில்லை என்று சொல்லிக்கொண்டே சிரிக்கிறீர்கள் .இந்த குட்டி தீவுக்குள் சோனகனொருவனுக்கு ஒரு தமிழனும் , தமிழனுக்கு ஒரு சோனகனோ நட்பிலில்லை என்பது நாம் இன ஒற்றுமைக்கு வெகு தூரம் பயணிக்க வேண்யிருக்கிறதென்பதை சொல்லகிறது.
சிரிக்காதீர்கள்...
உங்களின் சிரிப்பின் வலிமை , அதன் விலை என்னவென்று தெரியாமலேயே நீங்கள் சிரிக்கிறீர்கள் .
நீங்கள் சேர்ந்து வாழவில்லை சிரிக்கிறோம் என்கிறீர்கள். நாங்கள் அப்படியல்ல ..சேர்ந்து செறிந்து வாழ்பவர்கள். கண்டிக்கு காரணமானவர்கள் போல் எங்கள் ஊரில் இருபக்கத்திலும் இல்லாமலில்லை. பசியோடு காத்திருக்கிறார்கள் .அவர்கள். உங்கள் சிரிப்பை தீனியாக்கிவிடாதீர்கள் அவர்களுக்கு.
உங்களின் சிரிப்பின் பிரதிபலிப்பு.......நாளை உங்கள் முகநூலின் பதிவைத்தான் மாற்றியமைக்கும் .அதுதான் உங்கள் கடமையும் தேவையும். எங்களின் கவலை...
நாளை மீன் விற்க வரும் மீரிசா திரும்பி போகவேண்டும் ,, மேசன்வேலைக்கு போனமகேந்திரன் திரும்பி வரவேண்டுமேயென்பதே. ஐரோப்பாவிலும் , அரபு நாடுகளிலிருந்தும் பதிவிடும் உங்களுக்கு ஏழைகள் நாளை அகதி முகாம்களில் தஞ்சம்புகுந்து சோற்றுக்கு கையேந்தி நிற்க போவது பற்றி எந்த கவலையும் இல்லை .
இஸ்லாமியர்களே இந்த நேரத்தில் சிரிக்கும் இவர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கும் இதே நேரத்தில் உங்களிடமும் ஒன்று சொல்கிறேன்.
இந்த நேரத்து உங்கள் ஆற்றாமை, ஆதங்கம் , அங்கலாய்ப்பு , வேதனை , வெப்பிசாரமெல்லாம் புரியாதவர்களல்ல நாங்கள். ஆனால் இந்த உணர்வுகளால் தூண்டப்பட்டு நீங்கள் செய்கின்ற செயல்களால் ஏற்படும் விளைவுகளுக்கு நியாயம் சொல்ல முடியாத நிலைக்குள்ளாகிவிடாதீர்கள்.இன்று நடந்த அக்கரைப்பற்று , நற்பட்டிமுனை சம்பவங்களை போல் இனியேதும் நடவாதிருக்கட்டும்.
முகநூல் நட்புகளே !மாற்றுமதத்தவர் மனம் நோகும்படி பதிவிடுவதும் , புத்தனின் படத்தை போட்டு பொத்துவாயை என கொமண்டிடுவதும் ... பற்றியெரிந்து விரியும் தீயின் வாய்க்குள் வெண்ணெய் திரணையை திணித்து தீத்துவது போலாகிவிடும். சிந்தித்து செயல்படுங்கள்.
#இனவாதபின்னூட்டங்கள்உடனடியாகநீக்கப்படும்#
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment