போகும் ரயில்
-------------------------
அனார் இஸ்ஸத் ரிஹானா.
எனக்குள் கேட்கின்ற
காலங்களின் வெளியே
பயணித்துக் கொண்டிருந்தேன்
வெள்ளைப் பேய்களும்…….. கரும் பூதங்களும் உலவும்
ஆகாயம்…. பூமிக்கிடையேயான தண்டவாளத்தில்
நிலைகொள்ளாது ஆடும்
பொன் மிளிர்வுத் தூவல்களில்
ரயில் பட்டுப்புழுவைப்போல் நீளுகிறது
ரயிலின் பெட்டிகள் அனைத்திலும்
பருவங்களின் பன்மைகளாய்…..
பல்வேறு உருவகங்கள் கொண்ட
நான் அமர்ந்திருக்கிறேன்
எங்கோவோர் திசையில் வைத்து
மறைந்த சூரியன்
பெட்டியில் வந்தமர்ந்துள்ளது
உலகம் இருளிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும் பயணத்திலிருந்தேன்
அருகாமையில் இருந்த அனைத்தும்
தூரத்துக்கே போய்விடுகின்றன
புகைக் கோடுகளில்
பழுப்பு நிறத்தில்
பிரகாசமும் மங்கலுமான தடங்கள்
உள் நரம்புகளில்
ரயில் போகும் தடக்…. தடக்…. ஓசை
குளிரும் பனியின் வசியமாகக் கவியும் மேகப்பஞ்சு…..
ரயிலின் நினைவை தழுவுகின்றது
அந்த ராட்சதப்பூரான்
வெறும் பெட்டிகளையா ?
நிரப்பி விடப்பட்டவைகளையா இழுத்துச் செல்கிறது ?
௦
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
Author Details
gafslr
No comments:
Post a Comment