அதிஷ்ட உன்னி - அஹமட் செய்லானி - Global Activity Foundation

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday 28 July 2018

அதிஷ்ட உன்னி - அஹமட் செய்லானி

அதிஷ்ட உன்னி. 

மேசைக்கு ஏன் நான்கு கால்கள் இருக்கின்றன என்பது தான் ஸக்கலிபுஜான் கேட்ட முதல் கேள்வி. இப்படியொரு அற்புதமான கேள்வியை யாருமே கேட்டதில்லை என்று ஸக்லிபுஜானின் தகப்பனாகிய கட்டகலுஸான் திகைத்துப் போனார். அந்த திகைப்பின் அடையாளத்தை இன்றுவரை அவரது முகத்தில் வலது பக்கத்தை கைப்பற்றியிருக்கும் கரிய நிற கிரேப்ஸ் பழமளவு பெரிய உன்னியில் பார்க்கலாம்.  ஆனால் அந்த உன்னி தோன்றிய கதை வேறுவகையிலும் சொல்லப்படுகிறது. 

( கீழே வர இருப்பது பிலேஷ் பேக் என்பதால் பிளேக் என்ட் வயிட்டில் கற்பனை செய்யவும்..)

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன் கவர்மன்ட் ஸ்கூலில் கொடுக்கப்படும் சத்துணவுப் பொதிகளில் இரண்டைத் தூக்கிக்கொண்டு பிலேகிரவுண்ட் தொங்கலில் இருக்கும் கஜு மரத்துக்குக் கீழே போயி சாப்பிட்ட போதுதான் அந்த திகில் சம்பவம் நடந்திருக்கிறது. அந்தக்காலத்தின் ஆற்றங்கரை அழகுக் குஞ்சி என்று பெயரெடுத்த கட்டகலுஸான்,  தனது தலைக்கு மேலே சிவப்பு நிற கஜுப்பழத்தைப் பார்த்திருக்கிறார். பின்பு , சத்துணவாகத் தரப்பட்ட மஞ்சொக்காவையும் தேங்கப்பூவையும் அவசர அவரமாக விழுங்கிவிட்டு கையில் அகப்பட்ட சப்பை வடிவக் கல்லொன்றை எடுத்து ஓரே வீசாய் வீசி அடித்தார். எப்போதுமே குறி தப்பிவிடும் கட்டகலுஸானின் த்ரோ அன்றைக்கென்று பார்த்து சரியாகப்பட்டுவிட்டது. சரியாக என்றும் சொல்லமுடியாது. கஜு கூலானுக்குப் படவேண்டிய இவரது த்ரோ சற்று கீழிறங்கி கஜுக்கொட்டையில் பட்டுவிட்டது. பட்டதோடு கஜுக்கொட்டை சலக் என்று கீழே வந்து கட்டகலுஸானின் முகத்தில் விழுந்தது. அத்தோடு அழகுக்குஞ்சியின் முகம் ஆமைக்குஞ்சியின் முகம் போல ஆகிவிட்டது.*

( * கஜுப்பழத்தில் இருக்கும் பால் பட்டால் என்னாகும் என்று தெரியாத , கஜுப்பழம் என்றால் எதுவென்று கூடத் தெரியாத நகரத்தான்களுக்கு மட்டுமான குறிப்பு - கூகுளில் கஜு ப்ருட் என்று சர்ச் பன்னவும். கவனிக்க. நீங்கள் கஜு என்பதைத் தவறாக ஜுகா என்று சர்ச் செய்தால் அதற்கு நீங்களே பொறுப்பு...) 

பிளேஷ் பேக் முடிந்தது. கலர் கற்பனைக்கு வரவும். 

இப்படிப்பட்ட,  கட்டகலுஸானின் மானம் மரியாதையெல்லாம் காற்றில் பறக்கச் செய்யக்கூடிய கதையை தனது மகனான் ஸக்கலிபுஜானிடம் சொல்லமுடியாதல்லவா என்பதாலும் சொன்னால் அவனும் கற்களை எடுத்துக்கொண்டு கஜுக்கொட்டை பறிக்கப் போய்விடுவானல்லவா என்பதாலும் அந்தக் கதையை இத்தனை காலமும் பொத்திப் பாதுகாத்து வந்திருக்கிறார் மிஸ்டர் தன்மான கௌரவ கட்டகலுஸான். 

மேசை பற்றி ஸக்கலிபுஜான் அந்த ஒரு கேள்வியை மட்டும் கேட்டிருந்தால் பரவாயில்லை. வரசையாக நிறைய கேள்விகளை மேசையோடு தொடர்புபடுத்திக் கேட்டான். அந்தக் கேள்விகளில் சிலவற்றை கீழே பார்க்கலாம்.

மேசையின் ஒரு காலை நீக்கிவிட்டால் அது விழுந்துவிடுமா?

மூன்று கால் கதிரையை நாற்காலி என்று சொல்லலாம், மூன்று கால் மேசையை என்ன சொல்வது?

இரண்டு கால் மேசைக்கு ஏன் இரண்டு கால்கள்?

பின்பு ஒருநாள் வெறும் பலகையைப் பார்த்தபோது இப்படிக் கேட்டான். 

" இதன் கால்கள் எங்கே? "

இன்னொரு நாள் நான்கு குச்சிகளைப் பார்த்துவிட்டு..

" இதன் பலகை எங்கே.." இந்தக் கேள்வியைக் கேட்டபோது நிலமை எந்தளவுக்கு மோசமாகிவிட்டது என்பது கட்டகலுஸானுக்குப் புரிந்தது. ஓங்கி ஒரு அறை விட்டார். பொலேர்.. என்கிற சப்தத்தோடு சுவற்றோரம் சென்று விழுந்தான் ஸக்கலிபுஜான். 

அன்று முதல் ஸக்கலிபுஜான் கேள்வி கேட்கவில்லை. ( இந்த விடயத்தில் கட்டகலுஸானுக்குத் தான் அதிக சந்தோஷம். எப்போதாவது பையன் வளர்ந்து பெரியாளாகி எல்லோர் முன்னிலையிலும் தனது முகத்திலிருக்கும் க்ரேப்ஸ்** வடிவில் இருக்கும் உன்னியைப் பற்றி விசாரித்து மானத்தை விற்றுவிடுவானோ என்கிர பயம் அவருக்குள் இருந்தது. இனி அந்தக் கவலை இல்லை) . கேள்வி தான் கேட்கவில்லை. ஆனால் பதில்சொல்ல ஆரம்பித்துவிட்டான். 

(க்ரேப்ஸ் ** என்னவென்று தெரியாத தோழிகள் மூக்கின் மேல் பெருவிரலால் நூற்றி ஏழு தடவை சுரண்டவும்)

ஒரு நாள் ஸ்கூலில் ஸம்ஸா என்கிற டீச்சர் இப்படியொரு கேள்வியை ஸக்கலிபுஜானிடம் கேட்டார்.

" உங்க வாப்பாட மொகத்துல இரிக்கிற உன்னி எப்டி வந்துச்சி?.."

உடனே ஸக்கலிபுஜான்..
" இல்லை டீச்சர், அது கஜுக்கொட்டை விழுந்து ஏற்பட்ட மார்க்.."
என்றான். டென்ஷனாக இருக்கிறதா?  ஸக்கலிபுஜான் எப்படி அந்த உண்மையைத் தெரிந்துகொண்டான் என்று எனக்கும் யூகிக்க முடிவில்லை தான். ஒருவேலை இந்தக் கதையை எழுதும்போதே எனது முதுகுப்பின்னால் இருந்து ஸக்கலிபுஜான் படித்திருப்பானோ என்னவோ. 

ஸக்கலிபுஜான் தனது தகப்பனாகிய கட்டகலிஸானின் முகத்தில் இருக்கும் உன்னியின் கதையைக் கண்டுபிடித்தது எப்படி என்பதை எப்படியாது தேடிப்படித்து அடுத்த கதையில் சொல்கிறேன். 

எது எப்படியோ அது அதிஷ்ட உன்னி தான். இவ்வளவு நீண்ட புனைவெழுத கைகொடுத்திருக்கிறதல்லவா. 

துப்பறிதல் தொடரும்.
அஹமட் செய்லானி

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages